Published : 21 Dec 2019 09:47 PM
Last Updated : 21 Dec 2019 09:47 PM
நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவதற்கு 65.4% மக்கள் ஆதரவாகவும், முஸ்லிம் சமூகத்தில் 66% பேர் எதிராகவும் இருப்பதாக சி-வோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
என்ஆர்சியை அசாம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தியதற்கு 76.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் இந்த என்ஆர்சியை நாடு முழுவதும் அமல்படுத்தக் கோரியுள்ளனர்.
சி-வோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் இணைந்து நாடு முழுவதும் 3 ஆயிரம் மக்களிடம் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை கருத்துக்கணிப்பு நடத்தின. இதில் அசாம் மாநிலத்தில் 500 பேரிடமும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள முஸ்லிம் மக்களிடம் 500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
இன்று சி-வோட்டர்ஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்:
''நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 65.4 சதவீத மக்கள் ஆதரவாகவும், 28.3 சதவீத மக்கள் எதிராகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதில் 6.3 சதவீதம் பேர் எந்தவிதமான கருத்தைத் தெரிவிக்க மறுத்தும், சிலர் என்ஆர்சி என்றால் என்ன என்று தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் மக்களிடையே 66.2 சதவீதம் பேர் என்ஆர்சியை நாடு முழுவதும் அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் 28.5 சதவீதம் பேர் மட்டுமே என்ஆர்சிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்துக்களிடையே 72.1 சதவீதம் பேர் என்ஆர்சி நாடு முழுவதும் தேவை என்றும், 21.3 சதவீதம் பேர் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாநிலங்களில் வசிப்போர் 65.9 சதவீதம் பேர் என்ஆர்சியை நாடு முழுவதும் கொண்டுவர ஆதரவு தெரிவித்துள்ளனர். மேற்குப் பகுதி மாநில மக்களில் 67.5 சதவீதம் பேரும், வடமாநிலங்களில் 73.8 சதவீதம் பேரும், தென் இந்தியாவில் 52.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், நாடு முழுவதும் என்ஆர்சி தேவையில்லை என்று கிழக்கு மாநிலங்களில் 31.4 சதவீதம் பேரும், மேற்கு மாநிலங்களில் 22.1 சதவீதம் பேரும், வடமாநிலங்களில் 20.1 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். தென் இந்தியாவில் 40.6 சதவீதம் பேர் என்ஆர்சி தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.
என்ஆர்சியை நாடு முழுவதும் அமல்படுத்த வடகிழக்கு மாநிலங்களில் 73.4 சதவீதம் ஆதரவாகவும், 22 சதவீதம் பேர் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 76.9 சதவீதம் பேர் என்ஆர்சியை நடைமுறைப்படுத்தியதற்கு ஆதரவாகவும், 16.5 சதவீதம் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த மக்கள் இந்தியாவில் வசிப்பதற்கான காரணம் என்ற கேள்விக்கு, "சிறந்த பொருளாதார வாய்ப்புகள் இந்தியாவில் இருக்கிறது என்று 61.4 சதவீதம் பேரும், "மதரீதியான துன்புறுத்தல்களைச் சந்தித்தார்கள்"என்பதால் இங்கு வசிக்கிறார்கள் என்று 23.8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 14.8 சதவீதம் பேர் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்''.
இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT