Published : 21 Dec 2019 08:56 PM
Last Updated : 21 Dec 2019 08:56 PM
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) நாடு முழுவதும் உள்ள மக்களில் 62% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக சி-வோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம் அசாம் மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு 68 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சி-வோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் இணைந்து நாடு முழுவதும் 3 ஆயிரம் மக்களிடம் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை கருத்துக்கணிப்பு நடத்தின. இதில் அசாம் மாநிலத்தில் 500 பேரிடமும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள முஸ்லிம் மக்களிடம் 500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
இன்று சி-வோட்டர்ஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்:
''மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள மக்களில் 62.1 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 36.8 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் 57.3 சதவீதமும், மேற்கு இந்திய மாநிலங்களில் 64.2 சதவீதமும், வடமாநிலங்களில் 67.7 சதவீதமும், தென் இந்தியாவில் 58.5 சதவீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், கிழக்கு இந்தியாவில் 42.7 சதவீதம், மேற்கிந்தியாவில் 35.4 சதவீதம், வடக்கு மற்றும் தென் மாநிலங்களில் 38.8 சதவீத மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில், அங்கு 50.6 சதவீத மக்கள் ஆதரவாகவும், 47.4 சதவீத மக்கள் எதிராகவும் உள்ளனர். ஆனால், அசாம் மாநிலத்தில் உள்ள மக்கள் 68.1 சதவீதம் பேர் இந்தச் சட்டத்துக்கு எதிராகவும், 31 சதவீதம் பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.
முஸ்லிம் மக்களிடையே இந்தச் சட்டத்துக்கு 63.5 சதவீதம் பேர் எதிர்ப்பும், 35.5 சதவீதம் பேர் ஆதரவும், 0.9 சதவீதம் பேர் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்துக்களிடையே 66.7 சதவீதம் பேர் ஆதரவும், 32.3 சதவீதம் பேர் எதிர்ப்பும் உள்ளது.
மற்ற மதத்தினர் அடிப்படையில் 62.7 சதவீத மக்கள் ஆதரவாகவும், 36 சதவீதம் பேர் எதிராகவும் உள்ளனர்.
இந்த நாட்டில் அகதிகளாக வந்தவர்களால் சமூகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வருமா என்ற கேள்விக்கு 64.4 சதவீதம் பேர் "ஆம்" என்றும் 32.6 சதவீதம் பேர் "இல்லை" என்றும் தெரிவித்துள்ளனர்.
மற்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய மக்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்று கிழக்கு மாநிலங்களில் 69 சதவீதம் பேரும், மேற்கு மாநிலங்களில் 66 சதவீதம் பேரும், வட இந்தியாவில் 72.8 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். இதில் தென்னிந்திய மக்கள் 47.2 சதவீதம் பேர் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்றும், 50 சதவீதம் மக்கள் அவர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
சிஏஏ சட்டத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கும், எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கும் ஆதரவு குறித்துக் கேட்கப்பட்டது. இதில் மத்திய அரசு நடவடிக்கைக்கு ஆதரவாக 58.6 சதவீதம் பேரும், எதிர்க்கட்சிகளுக்கு 31.7 சதவீதம் பேரும் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதில் கிழக்கு, மேற்கு, வடக்கு, வடகிழக்கு மாநில மக்களில் பெரும்பாலானோர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும், தென் இந்தியாவில் 47.2 சதவீதம் மக்கள் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் 53.5 சதவீதம் மக்கள் எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும், 33.7 சதவீதம் பேர் மத்திய அரசு நடவடிக்கைக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிஏஏ சட்டத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு இந்துக்கள் தரப்பில் 67 சதவீதம் பேர் ஆதரவும், எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு 71.5 சதவீதம் முஸ்லிம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்’’.
இவ்வாறு அந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT