Last Updated : 21 Dec, 2019 08:00 PM

3  

Published : 21 Dec 2019 08:00 PM
Last Updated : 21 Dec 2019 08:00 PM

குடியுரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு: 3 கோடி குடும்பத்தினரைச் சந்திக்க பாஜக முடிவு; 100 பேரணிகள் நடத்தத் திட்டம்

பாஜக பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி | படம்:ஏஎன்ஐ.

புதுடெல்லி

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் தவறான பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில், அடுத்த 10 நாட்களுக்கு 100 பேரணிகள் நடத்தவும், 3 கோடி குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராடி வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்

காங்கிரஸ் கட்சியின் தவறான பிரச்சாரத்தை உடைக்கும் வகையிலும், பதிலடி தரும் வகையிலும், பாஜக மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அளவிலான நிர்வாகிகளுடன் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சதித்திட்டத்தை வரும் நாட்களில் மக்களிடம் கொண்டு சென்று உடைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி முஸ்லிம் வாக்குகளைப் பெறவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பேசுகிறது என்று தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பாஜக பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அடுத்த 10 நாட்களும் பாஜக தீவிரப் பிரச்சாரம் செய்ய இருக்கிறது. 3 கோடி குடும்பத்தினரை நேரடியாகச் சந்தித்து சட்டத்தை விளக்க இருக்கிறோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பேரணி நடத்தவும், 250-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பை நாடு முழுவதும் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இந்தச் சந்திப்பின் மூலம் குடியுரிமைச் சட்டத்தின் உண்மைகளையும், எதிர்க்கட்சிகளின் பொய்களையும் மக்களிடம் கொண்டு செல்வோம்.

நாட்டின் அமைதியை காங்கிரஸ் கட்சி குலைக்கிறது. குடியுரிமைச் சட்டம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி மக்களைக் குழப்புகிறது. ஆனால், இந்தத் திட்டம் உண்மையில் 3 நாடுகளில் இருந்து வரும் சிறுபான்மை மக்களுக்கு புதிய நம்பிக்கையையும் பாதுகாப்பையும் அளிக்கும்.

என்ஆர்சி முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு முழுவதும் பொய். இந்தப் பொய்யை காங்கிரஸ் அரசுதான் செய்கிறது''.

இவ்வாறு பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x