Published : 21 Dec 2019 05:37 PM
Last Updated : 21 Dec 2019 05:37 PM
மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள், 2019, செப்டம்பர் 30-ம் தேதிவரை, ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் பெற்றிருக்கும் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையின் கடைசிநாளான இன்று அறிவித்தார்.
மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் சிவசேனா, பாஜக இணைந்து போட்டியிட்டன. இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மாநிலம் முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்யும்போது சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்தால், விவசாயிகளுக்கு வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.
மேலும், சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், பருவம் தவறிய மழையால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தன. அதன் அடிப்படையில் மூன்று கட்சிகளும் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்து, குறைந்த செயல்திட்டத்தை உருவாக்கின.
அதன் அடிப்படையில் விவசாயிகளின் வேளாண் கடனை ரூ.2 லட்சம்வரை தள்ளுபடி செய்து முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வந்தது. கடைசி நாளான இன்று முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், " விவசாயிகள் வங்கியில் 2019, செப்டம்பர் 30-ம் தேதிவரை ரூ.2 லட்சம் வரை பெற்றிருக்கும் பயிர்க்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். இந்த திட்டத்துக்கு மகாத்மா ஜோதிராவ் பூலே கடன் தள்ளுபடி எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கும் சிறப்புத் திட்டமும் இருக்கிறது" எனத் தெரிவித்தார்
நிதியமைச்சர் ஜெயந்த் பாட்டீல் பேசுகையில், "கடன் தள்ளுபடி திட்டம் எந்த நிபந்தனையும் இல்லாதது, இந்த திட்டம் குறித்த விரிவான விவரங்கள் முதல்வர் அலுவலகத்திலிருந்து அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்
எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், "மக்களிடம் அளித்த உண்மையான வாக்குறுதிகளை முழுமையாக சிவசேனா நிறைவேற்றவில்லை. பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் தருவதாக கூறிய நிலையில் அதைத்தரவில்லை" என்று தெரிவித்தார்.அதன்பின் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT