Published : 21 Dec 2019 04:52 PM
Last Updated : 21 Dec 2019 04:52 PM
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, வரும் 23-ம் தேதி தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற சினிமா கலைஞர்களுக்கும் குடியரசு துணைத் தலைவரால் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொள்வார் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக தேசிய விருதுகள் குடியரசுத் தலைவரால் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்குகிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு தேநீர் விருந்து வழங்க உள்ளார்.
2018 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, 2019 பொதுத் தேர்தலை முன்னிட்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது. அதனால் இவ்விழா இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்த விழாவின் போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு சில விருதுகளை மட்டுமே வழங்கினார். முதல் கட்ட விருதுகளை மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோர் வழங்கினர். அதற்கடுத்து மற்ற விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
66-வது தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்கள் பட்டியல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் குஜராத்தி திரைப்படமான “ஹெலாரோ”வுக்கு சிறந்த திரைப்பட விருது கிடைத்துள்ளது. விக்கி கவுசல் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் முறையே “யூரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்” மற்றும் “அந்தாதூன்” ஆகியவற்றில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றனர். தெலுங்கு திரைப்படமான “மகாநடி” படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். “உரி” இன் ஆதித்யா தார் சிறந்த இயக்குனர் விருதை வென்றார்.
வருடாந்திர தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 23 (திங்கள் கிழமை) அன்று விஜியன் பவனில் நடைபெறுகிறது, அங்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT