Published : 21 Dec 2019 11:08 AM
Last Updated : 21 Dec 2019 11:08 AM
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் தனித்துப் போட்டியிட்ட பாபுலால் மராாண்டி மற்றும் சுதேஷ் மகாதோவும் கிங் மேக்கர்களாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 கட்டங்களாக நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்படுகிறது.
இந்தநிலையில் இறுதிக்கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன.
அதன்படி ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் அந்த இடங்களை எந்த கூட்டணியும் பிடிக்க முடியாது என்றும், தொங்கு சட்டப்பேரவையே அமையும் எனவும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
* சிவோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 35 இடங்களிலும், பாஜக 31 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் இதரக் கட்சிகள் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஐஏஎன்எஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 29 முதல் 36 இடங்களை கைப்பற்றும் என்றும் 31- 39 தொகுதிகளை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாணவர் பேரவை 5 முதல் 7 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் காங்கிரஸ் அணி பெரும்பான்மை பெற வாய்ப்பு இருப்பதாக ஒரு சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
* டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் அணிக்கு 44 தொகுதிகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 22 முதல் 32 தொகுதிகளும், காங்கிரஸ் அணிக்கு 38 முதல் 50 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாணவர் பேரவைக்கு 4-5 இடங்களும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சசா கட்சிக்கு 2-4 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என சில கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதால் தனித்துப் போட்டியிட்ட பாபுலால் மராாண்டி மற்றும் சுதேஷ் மகாதோவும் கிங் மேக்கர்களாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களில் சுதேஷ் மகாதோ ஜார்க்கண்டில் தற்போதைய பாஜக கூட்டணி அரசில் இடம் பெற்று இருப்பவர். பாபுலால் மராண்டி முன்னாள் பாஜக முதல்வர். இவர்கள் எடுக்கப்போகும் முடிவு ஜார்க்கண்ட் அரசியலில் முக்கிய பங்காற்றும் எனத் தெரிகிறது. அதுபோலவே காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடித்தால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT