Last Updated : 20 Dec, 2019 08:40 PM

 

Published : 20 Dec 2019 08:40 PM
Last Updated : 20 Dec 2019 08:40 PM

யாரெல்லாம் இந்தியக் குடிமக்கள் ? மத்திய அரசு அதிகாரி விளக்கம்

கோப்புப்படம்

புதுடெல்லி

1987-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்கு முன் இந்தியாவில் பிறந்தவர்கள், அல்லது அவர்களின் பெற்றோர் இந்த தேதிக்கு முன்பு பிறந்திருந்தால் அவர்கள் இயல்பாகவே இந்தியக் குடிமக்கள் என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019(சிஏஏ) பற்றியோ அல்லது தேசிய அளவில் கொண்டுவரப்படும் தேசிய குடியுரிமைப் பதிவேடு குறித்தோ யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று உயர் அதிகாரி தெரிவித்தார்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டெல்லி, வடகிழக்கு மாநிலங்கள், உத்தரப்பிரதேசம், கர்நாடக எனப் பல மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியர்கள் என்பதற்கு வரையறை என்ன என்பது குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம் 2004-ன்படி, அசாம் மாநிலத்தைத் தவிர்த்து இந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரின் பெற்றோர் இந்தியராக இருந்தால், சட்டவிரோத குடியேறியாக இல்லாமல் இருந்தால் அவர் இந்திய குடிமக்களாக கருதப்படுவார்.


1987-ம் ஆண்டு ஜூலை 1ம்தேதிக்கு முன்பாக இந்தியாவில் பிறந்தவர்கள்...

ஒருவர் கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் பிறந்திருந்தாலோ அல்லது அவரின் பெற்றோர் 1987-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் பிறந்திருந்தாலோ இயல்பாகவே இந்தியர்களாகக் கருதப்படுவார்கள்.

அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை இந்தியக் குடிமகன் என நிர்ணயிக்கப்படுவது 1971-ம் ஆண்டாகும்.

தேசிய குடியுரிமை பதிவேடு நாடுமுழுவதும் கொண்டு வரப்படும் சாத்தியம் குறித்து அந்த அதிகாரி கூறுகையில், " அது குறித்து இப்போதே கூறுவது சாத்தியமில்லை. அதுகுறித்து எந்தவிதமான விவாதங்களும் நடக்கவில்லை. நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம், குடியுரிமைச் சட்டத்தையும், அசாமில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள என்ஆர்சிசட்டத்தையும் ஒப்பிடாதீர்கள். இரு சட்டங்களும் வெவ்வேறானவை.அசாமில் குடியுரிமைக்கான வரையறுக்கப்பட்டது 1971-ஆண்டாகும்" எனத் தெரிவித்தார்

2004-ம் ஆண்டு திருத்தம்:-

1950, ஜனவரி 26 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள்

குடியுரிமைச் சட்டம் 2004 திருத்தத்தின்படி, " கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு, 1987, ஜூலை 1-ம்தேதிக்கு முன்பு பிறந்திருந்தால் இந்தியக்குடிமக்களாவர்.

1987-ம் ஆண்டு ஜூலை1-ம் தேதி மற்றும் அதற்குப்பின் - டிசம் 3ம்தேதி 2004-க்குள் பிறந்தவர்கள்:

மேலும், ஜூலை 1-ம் தேதி 1987ம் ஆண்டு அல்லது அதற்குப் பின், ஆனால் டிசம்பர் 3-ம் தேதி 2004-ம் ஆண்டுக்குள் ஒருவர் பிறக்கும் போது, பெற்றோர்களில் ஒருவர் இந்தியராக இருந்தால் இந்தியராகக் கருதப்படுவர்.

1992, டிசம் 10ம்தேதி மற்றும் அதற்குப்பின்- டிசம்.3, 2004க்கு முன்:

டிசம்பர் 10, 1992-ம் அன்று அல்லது அதற்குப்பின், ஆனால், டிசம்பர் 3ம்தேதி 2004-ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு வெளியே பிறந்த ஒருவரின் பெற்றோர் இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் இந்தியக் குடிமகனாக இருந்தால் அவர்களும் இந்தியர்களாகக் கருதப்படுவர்.

டிசம்பர் 3, 2004-ம் ஆண்டுக்குப்பின் இந்தியாவில் பிறந்தவர் ஒருவரின் தாய்,தந்தை இருவரும் இந்தியக் குடிமக்களாக இருந்தாலோ அல்லது தாய்,தந்தை இருவரில் ஒருவர் இந்தியராக இருந்து மற்றொருவர் சட்டவிரோத குடியேறியாக இல்லாமல் இருந்தால் அவர்கள் இந்தியர்களாகக் கருதப்படுவர்.

இவ்வாறு அந்த அதிகாரி விளக்கத்தில் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x