Last Updated : 20 Dec, 2019 07:09 PM

 

Published : 20 Dec 2019 07:09 PM
Last Updated : 20 Dec 2019 07:09 PM

2008-ம் ஆண்டு ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு : குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜெய்ப்பூர் நீதிமன்றத்துக்கு குற்றவாளிகள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட காட்சி

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 71 பேர் கொல்லப்பட்ட நிகழ்வில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்துச் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

கடந்த 2008-ம் ஆண்டு மே 13-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சந்த்போல் கேட், பாடி சவுபாட், திரிபோலயா பஜார், ஜவுஹரி பஜார், சங்கநேரி கேட் உள்ளிட்ட 8 இடங்களில் 12 முதல் 15 நிமிடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் 71 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 5பேர் ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர், 3 பேர் தப்பிவிட்டனர், 3 பேர் ஹைதராபாத் சிறையிலும், 3 பேர் டெல்லி சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதில் இருவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்தநிலையில், கடந்த புதன்கிழமை நீதிபதி அஜய்குமார் தீர்ப்பளித்தார். இதில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரில் முகமது சைப், சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சாபர்ரஹ்மான் ஆகிய 4 பேரை குற்றவாளிகள் என்றும் , சான்பாஷ் என்பவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததையடுத்து அவரை விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இந்தநிலையில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கான தண்டனை விவரங்களை நீதிபதி அஜய்குமார் இன்று அறிவித்தார். தண்டனை அறிவிக்கும் போது குற்றவாளிகள் முகமது சைப், சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சாபர்ரஹ்மான் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி அஜய் குமார் தீர்ப்பளித்தார்.

தண்டனை அறிவிக்கப்படும்போது, குற்றவாளிகள் 4 பேரும் நீதிமன்றத்தில் இருந்தனர். நாட்டையே உலுக்கிய முக்கியமான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால், நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x