Last Updated : 20 Dec, 2019 02:20 PM

2  

Published : 20 Dec 2019 02:20 PM
Last Updated : 20 Dec 2019 02:20 PM

மக்கள் அச்சப்பட வேண்டுமா? வீடு, நிலமில்லாதவர்கள் என்ன செய்யலாம்? என்ன ஆவணங்கள் தேவை? - என்ஆர்சி சில கேள்விகளும் பதில்களும்

பிரிதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் அசாம் மாநிலத்தில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து ஏராளமான தகவல்கள் பகிரப்படுவதால் விரும்பத்தகாத வன்முறைகளும், பதற்றமான சூழலும் நாடு முழுவதும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த இரு விஷயங்கள் குறித்து முறையான புரிதல் இல்லாததால்தான் மக்களிடையே அமைதியின்மையும், தவறான தகவல்கள் பரப்பப்படும்போது அதை நம்பி போராட்டத்திலும் ஈடுபடுகிறார்கள். தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவை குறித்து மத்திய அரசு சில கேள்விகளை அளித்து, சில பதில்களையும் வழங்கியுள்ளது.

என்ஆர்சியில் மிகவும் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், என்ஆர்சி இன்னும் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அசாம் மாநிலத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களிடம் இருந்து இந்தியர் என்பதற்காக எந்தவிதமான ஆதாரங்களும் கேட்கப்படாது. அடையாளஅட்டை மட்டுமே போதுமானது என்பது சாராம்சமாக இருக்கிறது.

என்ஆர்சி நடைமுறையின் போது, முஸ்லிம்களிடம் இந்தியர்தானா என்பதற்கு ஆதாரங்கள் கேட்கப்படுமா?

முதலில் மக்கள் முக்கியமான ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்ஆர்சியை தேசிய அளவில் கொண்டுவருவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசு எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்போ அல்லது விதிமுறைகளோ அல்லது நெறிமுறைகளோ என்ஆர்சி தொடர்பாகத் தயாரிக்கவில்லை. எதிர்காலத்தில் என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தியர் என்பதற்கான அடையாளத்தைக் கேட்பார்கள் என்று தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.

என்ஆர்சி என்பது ஆதார் கார்டு உள்ளிட்ட மற்ற அடையாள அட்டைகள் பெறும் நடைமுறையைப் போன்றதுதான். குடியுரிமைப் பதிவேட்டில் உங்கள் பெயரைப் பதிவு செய்து, உங்களுக்கு அரசு வழங்கிய எந்தவிதமான அதிகாரபூர்வ அடையாள அட்டை, ஆவணங்களைக் காண்பித்துப் பதிவு செய்யலாம். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையே போதுமானது.

ஒருவர் கல்வியறிவு இல்லாதவராக இருந்தால், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது?

அதுபோன்ற சூழலில், என்ஆர்சி நடவடிக்கையை எடுக்கும் அந்த அதிகாரி, உரிய சாட்சியங்களை அழைத்து வர அனுமதிப்பார். அதேசமயம், மற்ற ஆதாரங்களான, ஒருவர் இந்தக் கிராமத்தில்தான் வாழ்கிறார் என்பதற்கான சான்று பெற்று வருதல் அனுமதிக்கப்படும். இது முறையாகப் பின்பற்றப்படும். எந்த இந்தியக் குடிமகனும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படமாட்டார்.



இந்தியாவில் ஏராளமான மக்கள் வீடு இல்லாமல் வசிக்கிறார்கள், ஏழைகளாக இருக்கிறார்கள், கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள், அவர்களிடம் முறையான அடையாள அட்டை கூட இல்லை. அந்த மக்களுக்கு என்ன நடக்கும்?

அந்த மக்கள் சில ஆவணங்களின் அடிப்படையில் தேர்தலில் தங்கள் வாக்கைச் செலுத்தி இருப்பார்கள். அரசின் நலத்திட்ட உதவிகளை ஏதாவது அடிப்படையில் வாங்கியிருப்பார்கள். அந்த அடிப்படையில் அடையாள அட்டை உருவாக்கப்படும்.

ஆவணங்கள் இல்லாத மூன்றாம் பாலினத்தவர், கடவுள் நம்பிக்கையற்றவர், பழங்குடியினர், தலித்துகள் பெண்கள் மற்றும் நிலமில்லாதவர்கள் ஆகியோரை என்ஆர்சி முறை விலக்குகிறதா ?

இல்லை, என்ஆர்சியில் அதுபோன்று இல்லை. என்ஆர்சி நடைமுறைக்கு வரும்போது, மேலே குறிப்பிட்ட எந்த ஒருபிரிவினரையும் பாதிக்காது, பாதிக்கப்படமாட்டார்கள்?

என்ஆர்சி நடைமுறைக்கு வந்தால், கடந்த 1971-ம் ஆண்டுக்கு முன்பிருந்து இந்தியாவில் வசிக்கிறோம் என்ற ஆவணங்கள் அளிக்க வேண்டுமா?

அப்படியல்ல, அவ்வாறு கருதுவதும் தவறு. இந்த நடைமுறை அசாம் மாநிலத்துக்கு மட்டுமே பொருந்தும். அசாம் ஒப்பந்த அடிப்படையிலும், உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் நடத்தப்பட்ட என்ஆர்சியில் மட்டுமே இந்த நடைமுறை. அசாமில் பின்பற்றப்பட்ட என்ஆர்சி நடைமுறை வேறு, தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதில் பின்பற்றப்படும் நடைமுறை முழுமையாக வேறுபடும்.



என்ஆர்சி நடைமுறைக்கு வரும்போது, நாம் இந்தியர் என்பதை நிரூபிக்கப் பெற்றோரின் பிறந்த தேதி விவரங்களை அளிக்க வேண்டுமா?

உங்களின் பிறந்த தேதி, மாதம், ஆண்டு, இடம் ஆகியவற்றை வழங்கினாலே போதுமானது. உங்கள் பிறந்த தேதி குறித்த விவரங்கள் இல்லாவிட்டால் உங்களின் பெற்றோர் குறித்த விவரங்களை வழங்கலாம். ஆனால், பெற்றோர் குறித்த எந்த ஆவணங்களையும் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

குடியுரிமை நிரூபிப்பதைப் பொறுத்தவரை பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான எந்த ஆவணத்தையும் அளித்தாலே போதுமானது. ஆனால் எந்த வகையான ஆவணத்தை அளிக்கலாம் என்பது குறித்து இன்னும் எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை.

ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், காப்பீடு ஆவணம், நிலம், வீடு ஆவணங்கள், அதிகாரிகள் வழங்கிய சான்றிதழ்கள், ஆவணங்கள் போன்றவை அடையாளமாகச் சேர்க்கப்படலாம். இந்த ஆவணங்கள் பட்டியல் இன்னும் அதிகரிக்கும் என்பதால், இந்தியக் குடிமக்கள் எந்த சூழலிலும் பாதிக்கப்படமாட்டார்கள், கவலைப்படத் தேவையில்லை.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் எந்த குடிமகனையாவது பாதிக்குமா?

குடியுரிமைச் சட்டம் 1955ன் கீழ் வரும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், எந்த நாட்டுக் குடிமகனையும் இந்தியக் குடியுரிமை பெறுவதில் இருந்து தடை செய்யாது. பலூச்சிகள், அகமதியாக்கள், ரோஹிங்கியாக்கள் ஆகியோர் இந்தியக் குடியுரிமைக்கு எந்த நேரத்திலும் விண்ணப்பிக்க முடியும். அவர்கள் 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்டுள்ள தகுதிகளைப் பெற்றிருப்பது அவசியம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் ஒரு பகுதியா என்ஆர்சி?

இல்லை, குடியுரிமைச் சட்டம் என்பது தனிச்சட்டம். என்ஆர்சி என்பது தனி நடைமுறை. நாடாளுமன்றத்தில் நிறைவேறி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பின் நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த தேசத்துக்கான என்ஆர்சியின் விதிமுறைகள், நடைமுறைகள் இன்னும் முடிவாகவில்லை. அசாமில் மட்டுமே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி என்ஆர்சி நடைமுறையில் இருக்கிறது.

என்ஆர்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி இந்திய முஸ்லிம்கள் கவலைப்படுவது அவசியமா?

இந்தியாவில் உள்ள எந்த மதத்தைச் சேர்ந்த குடிமகனும் என்ஆர்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்களுக்கானதா என்ஆர்சி?
இல்லை, எந்த மதத்தோடும் என்ஆர்சி தொடர்பில்லாதது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்குமானது என்ஆர்சி. இது குடிமக்கள் பதிவேடு. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்தப் பதிவேட்டில் தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.

அடையாளத்தை நிரூபிப்பது எளிதானது என்றால், அசாமில் என்ஆர்சி நடைமுறையில் 19 லட்சம் மக்கள் ஏன் பாதிக்கப்பட்டார்கள்?

அசாம் மாநிலத்தில் ஊடுருவல் என்பது பழமையான பிரச்சினை. அதைக் கட்டுப்படுத்தவே கடந்த 1985-ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. அதன்பின் அப்போதைய ராஜீவ் காந்தி அரசு ஊடுருவல்காரர்களை அடையாளம் காண என்ஆர்சி தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி அசாம் மாநிலத்துக்கு மட்டும் அங்குள்ள மக்கள் 1971-ம் ஆண்டு மார்ச் 25-ம்தேதிக்குள் பிறந்தவர்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுவார்கள்.

குடியுரிமை எவ்வாறு முடிவு செய்யப்படுகிறது? அது அரசின் கைகளில் இருக்கிறதா?

குடியுரிமை விதிகள் 2009- அடிப்படையில் எவர் ஒருவருக்கும் குடியுரிமை முடிவு செய்யப்படுகிறது. அந்த விதிகள் அனைத்தும் குடியுரிமைச் சட்டம் 1955-ன் அடிப்படையி்ல் உருவானது. இந்த விதிகளை வெளிப்படையாக அனைவரும் பார்க்க முடியும். எந்த நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியக் குடிமகனாக 5 வழிகள் இருக்கின்றன.
இந்தியாவில் பிறந்து குடியுரிமை பெறலாம், வம்சாவளியைச் சார்ந்து குடியுரிமை பெறலாம், பதிவு மூலம் குடியுரிமை பெறலாம், இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமை பெறலாம், ஆவணங்கள் அடிப்படையில் குடியுரிமை பெறலாம்.

இவ்வாறு மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x