Published : 20 Dec 2019 12:43 PM
Last Updated : 20 Dec 2019 12:43 PM
குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டு இருப்பதன் மூலம் வங்க தேசத்தில் இருந்து யாரும் நுழைந்துவிட முடியாது என்று அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால் உறுதியளித்தார்.
அதேசமயம், அண்டை நாடுகளில் இருந்து மதரீதியான துன்புறுத்தலைச் சந்தித்து அசாமில் வாழ்ந்துவரும் மக்கள் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் முதல்வர் சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.
குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகிழக்கு மாநிலங்கள், அசாம் மக்கள் கடந்த ஒருவாரமாகத் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் வங்கதேசம், மேற்கு வங்கம் ஆகியவற்றில் இருந்து வந்துள்ள மக்களால் தங்களின் மொழி, கலாச்சாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து அடையாளங்களும் உரிமைகளும் பறிபோவதாகக் கூறி போராட்டம் நடத்துகின்றனர்.
இதுகுறித்து அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது, அவர் கூறுகையில், "குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக மாநிலத்தில் உள்ள மக்கள் கவலைப்படவில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலம் வங்க தேசத்தைச் சேர்ந்த ஒருவர் கூட அசாம் மாநிலத்துக்குள் நுழைய முடியாது.
ஆனால், வங்கதேசத்தில் மதரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு அங்கிருந்து தப்பி வந்து, பல ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் தங்கி இருப்பவர்கள் இந்தியக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம். குடியுரிமை விண்ணப்பம் நிரப்பிக் கொடுக்கும் பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் பட்டியல் வெளியிடப்படும். இது மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கும்.
புதிதாகக் குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதால் எங்களின் சமூகக் கட்டமைப்பில் எந்த தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அரசியலமைப்பின் 6-வது பட்டியல் படி அசாம் மாநிலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன்படி அசாம் மாநிலம், தனது கலாச்சார, சமூக, மொழி, பாரம்பரிய அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
ஆதலால், மக்கள் யாரும் தவறான தகவல் மூலம் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். மத்திய அரசும், மாநில அரசும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே பணியாற்றுகிறது.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடும் தலைவர்களை என்னுடன் பேசுவதற்கு அழைக்கிறேன். இதுதான் சரியான வழி. இருதரப்பினரும் அமர்ந்து பேசினால் தீர்வு காணலாம். அனைத்தும் சாத்தியம் " எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT