Published : 20 Dec 2019 12:13 PM
Last Updated : 20 Dec 2019 12:13 PM
கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்களை மங்களூரு போலீஸார் திடீரென கைது செய்ததற்கு கேரள அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மங்களூரு போலீஸாருடன், கேரள உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து அனைத்து பத்திரிகையாளர்களையும் போலீஸார் கேரள எல்லைக்கு அனுப்பி வைத்தனர்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் நேற்று நடந்த போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். அந்த இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக மங்களூரு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
அந்த மருத்துமனை முன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி நிருபர்களும், கேமராமேன்களும் குவிந்திருந்தனர். ஆனால், உடற்கூறு ஆய்வு குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்காத மங்களூரு போலீஸார் அனைத்து ஊடகவியலாளர்களையும் கைது செய்வதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, பத்திரிகையாளர்களில் ஒருவர் அங்கிருந்து ஒருவர் தப்பித்துச் சென்று கேரள எல்லைக்குச் சென்று தனது பத்திரிகை நிறுவனத்துக்குத் தகவல் அளித்தார். அதன்பின் கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்துக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன் உத்தரவின் பெயரில் முதல்வர் அலுவலகம், கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெஹ்ரா ஆகியோர் மங்களூரு போலீஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியபின் அனைத்து ஊடகத்தினரும் கேரள எல்லைக்குக் கொண்டு சென்று இறக்கி விடப்பட்டனர்.
இதுகுறித்து கேரள போலீஸ் டிஜிபி லேக்நாத் பெஹ்ரா கூறுகையில், "கேரள ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் பணியை மட்டும்தான் செய்தார்கள். சட்டத்துக்கு விரோதமாக எதையும் செய்யவில்லை. அவர்களை உடனடியாக விடுவித்து, மாநிலத்துக்குத் திரும்பி வரக் கேட்டுக்கொண்டேன்" எனத் தெரிவித்தார்.
மங்களூருவில் போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிய கேரள ஊடகத்தைச் சேர்ந்த சிலர் கூறுகையில், "நாங்கள் கேரள எல்லையில் நிற்கிறோம். மங்களூரு மருத்துவமனையில் இருவரின் உடற்கூறு ஆய்வுத் தகவலைச் சேகரிக்க நின்றிருந்தோம். ஆனால், அனைத்து ஊடகத்தினரையும் மங்களூரு போலீஸார் திடீரென கைது செய்வதாகத் தெரிவித்தனர். எங்கள் பணியைச் செய்யவிடவில்லை" எனத் தெரிவித்தனர்.
கேரளாவில் வந்த மக்கள்தான் மங்களூருவில் குழப்பம் விளைவித்தார்கள், கலவரத்தைத் தூண்டினார்கள் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பேசியதற்கு கேரளத் தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயராஜன் கூறுகையில், "கர்நாடக அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார். கேரள ஊடகத்தினர் மீது போலீஸார் எடுத்த நடவடிக்கையும் கண்டனத்துக்குரியது. ஊடகத்தினர் அவர்களின் பணியை மட்டுமே செய்தார்கள்" எனத் தெரிவித்தார்.
ஊடகத்தினரை மங்களூரு போலீஸார் கைது செய்ததை கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT