Published : 20 Dec 2019 10:23 AM
Last Updated : 20 Dec 2019 10:23 AM
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கான 5-வது மற்றும் கடைசிக் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுவரை 4 கட்டங்களாக நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை 65 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் மீதமுள்ள 6 மாவட்டங்களில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5-வது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் 237 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு போரியோ, பார்ஹைத், லிதிபாரா, மகேஷ்புரா, சிகாரிபாரா ஆகிய 5 பதற்றமான தொகுதிகளில் மட்டும் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது. மற்ற தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 12சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தத் தேர்தலில் மொத்தம் 40 லட்சத்து 5 ஆயிரத்து 287 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 19 லட்சத்து 55 ஆயிரத்து 336 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர் உள்ளனர்.
ஜார்க்கண்ட் தலைமைத் தேர்தல் அதிகாரி வினய் குமார் சவுபே கூறுகையில், " 5-வது மற்றும் கடைசிக் கட்ட தேர்தலில் மொத்தம் 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள். தேர்தல் அமைதியாக நடக்கும் வகையில் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்காக 5 ஆயிரத்து 389 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த இடத்தில் 396 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. 1,756 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
249 வாக்குப்பதிவு மையங்கள் மாதிரி வாக்குப்பதிவு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. 133 வாக்குப்பதிவு மையங்களில் பெண்கள் மட்டும் பணியாற்றுகிறார்கள். இங்கு நேரலை வசதி செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளரும் வேளாண் துறை அமைச்சருமான ரந்திர் சிங், மகளிர் மேம்பாட்டு அமைச்சர் லூயிஸ் மாரண்டி, முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குகள் அனைத்தும் வரும் 23-ம் தேதி எண்ணப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT