Published : 19 Dec 2019 02:13 PM
Last Updated : 19 Dec 2019 02:13 PM

காங்கிரஸ் ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புகிறது: பாஜக குற்றச்சாட்டு

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து புதுடெல்லியில் இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

ஹைதராபாத்

குடியுரிமைச் சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது குறித்து காங்கிரஸ் ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பி வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய அரசு அண்மையில், குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

இதனை எதிர்த்து காங். உள்பட 12 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து ''குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறுங்கள்'' என்று முறையீடு செய்தது. இதனை அடுத்து டெல்லி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மாபெரும் எதிர்ப்புப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இச்சட்டத்தை எதிர்த்து இன்று புதுடெல்லியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பி வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து தெலங்கானா மாநிலக் கட்சி அலுவலகத்தில் மாநில பாஜக தலைவர் கே.லக்ஷ்மண் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

''புதிய சட்டத்தின் பெயரில் எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களிடம் அச்சத்தை உருவாக்க முயல்கின்றன. உண்மை என்னவென்றால், அது சிறுபான்மையினரைப் பாதுகாப்பது மட்டுமே. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் துன்பங்களை அனுபவித்து அகதிகளாக வந்தவர்களைப் பாதுகாக்கும் ஒரு சட்டம் இது.

பொதுவாக, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு நமது மக்கள் ஆதரவாக உள்ளனர். ஆனால் காங்கிரஸும் அதன் ஆதரவுக் கட்சிகளும் எதிர்ப்பு என்ற போர்வையில் வன்முறையைத் தூண்டுகின்றன. இதன் மூலம் இப்போது முஸ்லிம்களிடையே அச்சத்தின் சூழலை உருவாக்க முயல்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் எந்தவொரு நல்ல திட்டத்திற்கும் காங்கிரஸ் ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை. முத்தலாக், பிரிவு 370 மற்றும் ராம் மந்திர் போன்ற பிரச்சினைகளில் அவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தவொரு இந்தியரின் உரிமைகளையும் பறிக்கவில்லை அல்லது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் தெளிவாகக் கூறியுள்ளனர். ஆயினும் காங்கிரஸ் கட்சி தனது அரசியல் ஆதாயத்திற்காக வன்முறையைத் தூண்டுவதற்கும் மக்களை அச்சுறுத்துவதற்கும் முயல்கிறது.

இந்தியாவில் முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்பானவர்கள். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அவர்களின் மக்கள் தொகை 9.8 சதவீதத்திலிருந்து 14.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரிவினையின்போது, இந்துக்களின் மக்கள் தொகை மற்ற சிறுபான்மையினர் பாகிஸ்தானில் 23% லிருந்து 3.7% ஆகவும் பங்களாதேஷில் 22% முதல் 7% வரை குறைக்கப்பட்டனர்.

தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த மசோதா இந்தியக் குடிமக்களுக்கு எதிரானதல்ல என்றபோது அவரது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஏன் அதை எதிர்த்தது என்பதை அறிய விரும்புகிறேன்.

முஸ்லிம்களின் அச்சங்களைத் தீர்ப்பதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதற்கு எதிராக நாடு முழுவதும் விழிப்புணர்வுத் திட்டத்தை பாஜக தொடங்கவுள்ளது''.

இவ்வாறு தெலங்கானா பாஜக தலைவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x