Published : 18 Dec 2019 08:11 PM
Last Updated : 18 Dec 2019 08:11 PM
காங்கிரஸ் எம்.பி.யும் எழுத்தாளருமான சசி தரூர், நாடக ஆசிரியர் நந்த் கிஷோர், தமிழக எழுத்தாளர் சோ.தர்மன் உள்ளிட்ட 23 எழுத்தாளர்கள் 2019-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி விருதாகும். தலைசிறந்த நாவல், சிறுகதை நாடகம் உள்ளிட்டவற்றுக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற சாகித்ய அகாடமி தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 23 மொழிகளில் உள்ள எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதைக் கடந்த 1955-ம் ஆண்டில் இருந்து வழங்கி வருகிறது.
சாகித்ய அகாடமி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் கம்பர், செயலாளர் கே. சீனவாச ராவ் ஆகியோர் தலைமையில் நிர்வாகக் குழு கூடி இந்த விருதுகளை அறிவித்தது.
இந்த ஆண்டு 23 எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எழுதிய அன் எரா ஆஃப் டார்க்நெஸ் (An Era of Darkness) என்ற ஆங்கில நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருத்துக்கு தேர்வாகிய தமிழ் எழுத்தாளர் சோ தர்மன்: படம் உதவி ட்விட்டர்
7 கவிஞர்கள் சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புகான் பாசுமடாரி (போடோ), நந்த் கிஷோர் ஆச்சார்யா (இந்தி),நிபா ஏ காண்டேகர் (கொங்கனி), குமார் மணிஷ் அரவிந்த் (மைதிலி), வி. மதுசூதனன் நாயர் (மலையாளம்), அனுராதா பாட்டீல் ( மாராத்தி), பென்னா மதுசூதன் (சமஸ்கிருதம்) ஆகியோர் சாகித்ய அகாடமி விருத்துக்குத் தேர்வாகியுள்ளனர்
நாவல்களில் அசாம் எழுத்தாளர் ஜோய்ஸ்ரீ கோஸாமி மகந்தா, மணிப்பூர் எழுத்தாளர் பிர்மங்கோல் சிங் , தமிழ் எழுத்தாளர் சோ. தர்மன், தெலுங்கு எழுத்தாளர் பந்தி நாராயன் சுவாமி ஆகியோர் சாகித்ய அகாடமி விருது பெற உள்ளனர்.
சிறுகதை படைப்பாளிகளில் காஷ்மீர் எழுத்தாளர் அப்துல் அகாத் ஹஜினி, ஒடிசாவின் தருண் கந்தி மிஸ்ரா, பஞ்சாபி எழுத்தாளர் கிரிபால் கசாக், ராஜஸ்தான் எழுத்தாளர் ராம்ஸ்வரூப் கிசான், சாந்தாலி எழுத்தாளர் காளி சரண் ஹெம்பரன், சிந்தி எழுத்தாளர் ஈஸ்வர் மூர்ஜனி ஆகியோருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட உள்ளது.
ஆங்கிலத்தில் சசி தரூர், கன்னடத்தில் விஜயா, உருது மொழியில் ஷாபே கிட்வாய் ஆகியோர் சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்பு நூல் எழுதியமைக்காக சாகித்ய அகாடமி விருத்துக்குத் தேர்வாகியுள்ளனர்.
மேலும், வங்காள மொழி எழுத்தாளர் சின்மாய் குஹா, டோக்ரி எழுத்தாளர் ஓம் சர்மா ஜந்த்ரிரி, குஜராத்தி எழுத்தாளர் ரதிலால் போரிசாகர் ஆகியோரும் விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்
2020-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் விருதுக்குத் தேர்வாகிய 23 பேருக்கும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், பட்டயமும் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT