Last Updated : 18 Dec, 2019 07:07 PM

7  

Published : 18 Dec 2019 07:07 PM
Last Updated : 18 Dec 2019 07:07 PM

நிர்பயாவின் தாயார் கண்ணீர் விட்டு கதறினார்: கைதிகளின் தண்டனை விவரம் ஜன.7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி : படம் |ஏஎன்ஐ.

புதுடெல்லி,

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை 2020, ஜனவரி 7-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதைக் கேட்ட நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நீதிமன்றத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

கடந்த 2012-ம் ஆண்டு, 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அதன்பின் மீட்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
மாணவியைப் பலாத்காரம் செய்ததாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், வழக்கில் 4-வது குற்றவாளியான அக்சய் குமார் சிங் மட்டும் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி அக்சய் குமார் சிங் சார்பில் அவரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையில் நீதிபதிகள் அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று அக்சய் சிங் மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், அக்சய் சிங்கிற்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தனர்.


இதற்கிடையே டெல்லி பாட்டியாலாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நிர்பயாவின் தாயார், ஆஷா தேவி, குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனையை விரைந்து நிறைவேற்றக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி சதீஸ் குமார் அரோரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சதீஸ் குமார், "உச்ச நீதிமன்றம் அக்சய் சிங் குமார் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் இன்னும் நீதிமன்றத்துக்குக் கிடைக்கவில்லை. ஆதலால், வழக்கை 2020-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்" என அறிவித்தார்.

அப்போது நீதிமன்றத்தில் தீர்ப்பைக் கேட்க ஆவலுடன் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி காத்திருந்தார். நீதிபதி சதீஸ் குமாரின் அறிவிப்பைக் கேட்டதும், ஆஷா தேவி கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

அப்போது ஆஷா தேவி கண்ணீருடன், " இந்த நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கிவிட்டதே, எவ்வாறு அவர்களின் உரிமைகளைக் கணக்கில் எடுக்கிறீர்கள். அப்படியென்றால் எங்கள் உரிமைகள் என்னாவது?" என்று கண்ணீருடன் கேட்டார்.

நீதிபதி சதீஸ் குமார் கூறுகையில், "உங்கள் மீது நான் இரக்கப்படுகிறேன். உங்கள் மகள் இறந்துவிட்டார். எனக்குத் தெரியும் என்றாலும் குற்றவாளியின் உரிமையும் இருக்கிறது. உங்கள் கருத்தையும் கேட்போம், சட்டத்தின் படியும் நடக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த நிருபர்களிடம் ஆஷா தேவி கூறுகையில், " நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கியது வேதனையாக இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக என் மகளை என்னிடம் இருந்து பிரித்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரப் போராடி வருகிறேன். ஆனால் நீதிமன்றம் எங்கள் உரிமைகளைக் கருத்தில் கொள்ளவில்லை. இப்போதும் இறுதியான தீர்ப்பு சொல்லாமல் அடுத்த விசாரணை என்று சொல்லிவிட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, உச்ச நீதிமன்றம் அக்சய் சிங்கின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது குறித்து ஆஷா தேவி கூறுகையில் " உச்ச நீதிமன்றம் அக்சய் சிங்கின் மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

நிர்பயாவின் தந்தை கூறுகையில், "கடந்த 7 ஆண்டுகளாகப் பல வலியான பாதைகளைக் கடந்திருக்கிறோம். குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்கினால்தான் மனநிறைவு பெறுவோம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x