Published : 18 Dec 2019 09:18 AM
Last Updated : 18 Dec 2019 09:18 AM

உத்தர பிரதேச நீதிமன்றத்தில் குற்றவாளி சுட்டுக் கொலை

லக்னோ

உத்தர பிரதேசம் நஜிபாபாத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் ஹாஜி இஷான். கடந்த மே 28-ம் தேதி அவரும் அவரது உறவினர் ஷாதபும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக ஷாநவாஸ், அப்துல் ஜபார், டேனிஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு உத்தர பிரதேசத்தின் பிஜ்னோரில் உள்ள தலைமைஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மாஜிஸ்திரேட் யோகேஷ் குமார் வழக்கை விசாரித்து கொண்டிருந்தார். நீதிமன்ற அறையில் திடீரென 3 மர்ம நபர்கள், குற்றவாளிகளைக் குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஷாநவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர். மாஜிஸ்திரேட், வழக்கறிஞர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்த குழப்பத்தைப் பயன்படுத்தி கொலை வழக்கு குற்றவாளிகள் அப்துல் ஜபார், டேனிஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவான 3 பேரையும் சில மணி நேரங்களில் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து எஸ்.பி. சஞ்சீவ் தியாகி கூறியபோது, "கடந்த மே மாதம் பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் ஹாஜி இஷான் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்க அவரது மகன் ஷகீல் கானும் 2 கூட்டாளிகளும் நீதிமன்றத்தில் புகுந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஷாநவாஸ் உயிரிழந்தார். 2 போலீஸார் காயமடைந்தனர்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x