Published : 17 Dec 2019 10:16 PM
Last Updated : 17 Dec 2019 10:16 PM
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் அதிகரித்து வரும் நிலையில் மலையாளத் திரைப்பட நடிகர் மம்மூட்டி, அவரின் மகன் துல்கர் சல்மான் ஆகியோர் மறைமுகமாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு திருத்தம் செய்து கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் கடந்த 3 நாட்களாகப் போராட்டம் நடந்து வருகிறது. திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்றது.
ஒரே மேடையில் முதல்வர் பினராயி விஜயனும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர். இன்று கேரள மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் கடையடைப்புப் போராட்டமும் நடந்தது.
இந்த சூழலில் மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மம்மூட்டி தனது முகநூல் பக்கத்தில் குடியுரிமைச் சட்டத்தைக் குறிப்பிடாமல் ஆனால், மறைமுகமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
அதில், "சாதி, மதம், நம்பிக்கை உள்ளிட்ட அனைத்தையும் கடந்து நாம் உயரும்போதுதான் வலிமையான தேசமாக மாற்ற முடியும். ஒற்றுமையின் உத்வேகத்துக்கு எதிராக ஏதாவது இருந்தால், அது நம்பிக்கை இழக்கச் செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் முகநூலில் பதிவிட்ட கருத்தில், "மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம் ஆகியவை நமது பிறப்புரிமை. அதை அழிக்க எது வந்தாலும் அதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். எவ்வாறாகினும், அகிம்சை, வன்முறையில் ஈடுபடாமல் இருத்தல்தான் நமது பாரம்பரியம் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அமைதியான வழியில் போராடுங்கள், சிறந்த இந்தியாவுக்காகத் துணை நிற்போம்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஹேஷ்டேகுகளாக லாங்லிவ் செக்குலரிஸம், யுனைடெட் வீ ஸ்டாண்ட் ஆகியவற்றைப் பதிவிட்டுள்ளார்.
மலையாள நடிகர்களான பிரித்விராஜ், பார்வதி, டோவினோ, அமலாபால் ஆகியோர் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு தங்களின் எதிர்ப்பை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT