Last Updated : 16 Dec, 2019 05:17 PM

1  

Published : 16 Dec 2019 05:17 PM
Last Updated : 16 Dec 2019 05:17 PM

நான் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வராது: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

கொல்கத்தாவில் நடந்த பேரணியில் பங்கேற்ற முதல்வர் மம்தா பானர்ஜி : படம் ஏஎன்ஐ

கொல்கத்தா

நான் உயிருடன் இருக்கும் வரை குடியுரிமைச் சட்டத்தை மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்த விடமாட்டேன் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள், அசாம், மேற்கு வங்கத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 4-வது நாளாக வன்முறை, ரயில் மறியல், பஸ் கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்கள் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன. இந்த சூழலில் கொல்கத்தாவின் மையப்பகுதியான ரெட் ரோட் சாலையில் இருந்து ஜோராசான்கோ தாக்கூர் பாரி பகுதி வரை ஏறக்குறைய 4 கி.மீ.க்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடந்தது.

இந்தப் பேரணியின் முடிவில் முதல்வர் மம்தா பானர்ஜி மக்களிடம் பேசியதாவது:

''நம்முடைய மாநிலத்துக்கு வெளியில் இருந்து சில சக்திகள், மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரிடம் நட்புடன் பழகி, தற்போது வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் பாஜகவிடம் பணம் பெற்று வேலை செய்கிறார்கள். இவர்களின் வலையில் விழுந்து விடாதீர்கள்.

நான் உயிருடன் இருக்கும் வரை மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் அமல்படுத்த விடமாட்டேன். என் அரசை டிஸ்மிஸ் செய்தாலும் சரி அல்லது என்னைச் சிறையில் தள்ளினாலும் சரி. நான் ஒருபோதும் இந்த கறுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டேன். இந்தச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை ஜனநாயக முறையில் போராடுவேன்.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் தாக்கியுள்ளதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்று போலீஸார் நடந்திருக்கக் கூடாது.

பாஜக மற்ற மாநிலங்களுக்கு அறிவுரை சொல்லும் முன், சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசும் முன், வடகிழக்கில் தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கட்டும்.

மாநிலத்தில் கலவரம் ஏற்பட்ட சில இடங்களில் ரயில்கள் எரிக்கப்பட்டதற்கு ரயில்வே நிர்வாகம் ரயில் சேவையை நிறுத்திவிட்டது''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x