Published : 16 Dec 2019 01:02 PM
Last Updated : 16 Dec 2019 01:02 PM
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் அத்துமீறி நடத்திய தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்த மனு நாளை விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், டெல்லியில் நடக்கும் வன்முறை, கலவரம் நிறுத்தப்பட வேண்டும். மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்து செயல்படக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கண்டிப்புடன் தெரிவித்தார்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், உ.பி, உள்ளிட்டவற்றில் போராட்டம் நடந்து வருகிறது.
டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், காங்கிரஸ் மாணவர் தேசியக் கூட்டமைப்பு கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தது. இந்நிலையில் நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 3 பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதில் மாணவர்கள் மீது போலீஸார் அத்துமீறித் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் நடந்தேறின. இது தொடர்பான வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவின. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, உ.பி.யில் உள்ள அலிகர் பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று நள்ளிரவு போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
இந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டியும், மாணவர்கள் மீது போலீஸார் அத்துமீறி நடத்திய தாக்குதல்கள் எடுத்துக் கூறியும், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், கோலின் கோன்சால்வேஸ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர். காவே, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், "மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். இது தீவிரமான மனித உரிமை மீறல். இது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்" எனக் கோரினார்.
அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, " உரிமைகள் என்ன என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம். அதற்கு முன் கலவரம், வன்முறை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். அதன்பின் இந்த வழக்கை நாங்கள் தாமாக முன்வந்து வழக்காக எடுக்கிறோம். உரிமைகளுக்கும், அமைதியான போராட்டங்களுக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல" எனத் தெரிவித்தார்.
மூத்த வழக்கறிஞர் கோன்சலேஸ் கூறுகையில், " உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஜாமியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விசாரிக்க வேண்டும். இந்த வீடியோக்களைப் பாருங்கள்" என்றார்.
அதற்குத் தலைமை நீதிபதி போப்டே, " அந்த வீடியோக்களைப் பார்க்க முடியாது. பொதுச்சொத்துகளைத் தொடர்ந்து சேதப்படுத்தினால் நாங்கள் வழக்கை விசாரிக்கமாட்டோம். இது மாணவர்கள் மத்தியில் நடக்கிறது. மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துச் செயல்படக்கூடாது. சூழல் அமைதியான பின் இதுபற்றி விசாரிக்கப்படும். முதலில் கலவரம் நிறுத்தப்பட வேண்டும். நாளை இந்த மனுவை விசாரிக்கிறோம் " எனக் கண்டித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT