Published : 14 Dec 2019 07:22 PM
Last Updated : 14 Dec 2019 07:22 PM
ராகுல் காந்தி தனது பெயரை ராகுல் ஜின்னா என வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று வீர சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக, பதிலடி கொடுத்துள்ளது.
முஸ்லிம்கள் ஆதரவைப் பெற பேசிவரும் ராகுல் காந்திக்கு ராகுல் ஜின்னா என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி மேக் இன் இந்தியா, ரேப் இன் இந்தியா மாறியுள்ளது என்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார். ராகுலின் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரி பாஜக பெண் எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். ஆனால், ராகுல் காந்தி மன்னிப்பு கோர முடியாது என்று தெரிவித்தார்
இந்நிலையில், டெல்லியில் தேசத்தைக் காப்போம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய ராகுல் காந்தி, " என்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னுடைய பெயர் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி" என்று பேசி இருந்தார்
ராகுல் காந்திக்குப் பதில் அளிக்கும் வகையில் பாஜகவின் செய்தித்தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் பதிலடி கொடுத்தார்.அவர் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்த போது கூறுகையில், " ராகுல் காந்திக்குப் பொருத்தமான பெயர் ராகுல் ஜின்னா என்று வைத்துக்கொள்ளட்டும். முஸ்லிம் ஆதரவைப் பெற நடத்தும் உங்கள் அரசியல், மனோபாவம் ஆகியவை முகமது அலி ஜின்னா என்று அழைக்கவே பொருத்தமாக இருக்கும் , சாவர்க்கர் என்று பொருத்தமாக இருக்காது " எனத் தெரிவித்தார்
பாஜகவின் மற்றொரு செய்தித்தொடர்பாளர் சம்பித் பித்ரா கூறுகையில், " ராகுல் காந்தி ஒருபோதும் ராகுல் சாவர்க்கராக முடியாது. ஏனென்றால், சாவர்கர் தேசப்பற்று, துணிச்சல், தியாகம் மிக்கவர். குடியுரிமை மசோதா, அரசியலமைப்பு 370பிரிவு, சர்ஜிகல் ஸ்ட்ரைக் ஆகியவற்றில் பாகிஸ்தான் என்ன பேசுகிறதோ அதைத்தான் ராகுல் காந்தியும் பேசுகிறார்" எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT