Last Updated : 14 Dec, 2019 05:27 PM

1  

Published : 14 Dec 2019 05:27 PM
Last Updated : 14 Dec 2019 05:27 PM

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா : கோப்புப்படம்

ஸ்ரீநகர்,

பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவுக்கு காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு 370-வது பிரிவு ஆகியவற்றைக் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திரும்பப்பெற்றது மத்திய அரசு.

இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.அதன்பின் இவர்கள் 3 பேரும், பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்த மத்திய அரசு லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இது கடந்த அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

வீட்டுக்காவலில் இருக்கும் பரூக் அப்துல்லாவை அவரின் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினர்கள் கடந்த மாதம் சந்தித்துப் பேசினார்கள் ஆனால் எப்போது விடுவிக்கப்படுவார் என்ற தகவல் ஏதும் இல்லை.

நாடாளுமன்றக் குளிர்காலக்கூட்டத் தொடரில் தன்னை பங்கேற்க விடமாமல் மத்திய அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக பரூக் அப்துல்லா குற்றம்சாட்டினார். மேலும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எழுதிய கடிதத்துக்கும் பரூக் அப்துல்லா பதில் கடிதம் எழுதி இருந்தார். அதை சசி தரூர் வெளியிட்டார்.

அதில், " அக்டோபர் 21-ம் தேதி சசி தரூர் எழுதிய கடிதம் எனக்கு இன்றுதான் கிடைத்தது. தற்போது நான் கிளைச் சிறையில் இருக்கிறேன். என்வீட்டையே கிளைச்சிறையாக மாற்றிவிட்டார்கள். நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும், அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் என்னை இதுபோல் நடத்தும் முறை சரியானது அல்ல. நாங்கள் கிரிமினல்கள் அல்ல" எனத் தெரிவித்திருந்தார்

இந்த சூழலில் ஜம்மு காஷ்மீர் யூனியன்பிரதேச நிர்வாகம் பரூக் அப்துல்லாவுக்கான காவலை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள குப்கார் சாலையில் உள்ள வீட்டில் வசித்துவரும் பரூக் அப்துல்லாவின் வீடு கிளைச்சிறையாக மாற்றப்பட்டுள்ளது. பொதுப்பாதுகாப்புச் சட்டத்தை பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா கடந்த 1978-ம் ஆண்டு கொண்டுவந்தார்.

ஆனால், இந்த சட்டம் எந்த அரசியல்வாதியும் மீது பாயாத நிலையில் தந்தை கொண்டுவந்த சட்டம் முதல்முறையாக மகனான பரூக் அப்துல்லா மீது பாய்ந்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் ஒருவரை விசாரணையின்றி 2 ஆண்டுகள் வரை தடுப்புக்காவலில் வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x