Published : 13 Dec 2019 08:30 PM
Last Updated : 13 Dec 2019 08:30 PM
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடும் மக்களை அடக்க முற்பட்டால், தகுந்த பதிலடி கொடுக்க நேரிடும் என்று அசாம் அரசுக்கு உல்பா(இன்டிபென்டன்ட்) எச்சரிக்கை விடுத்துள்ளது.
உல்பா(இன்டிபென்டன்ட்)என்பது அசாம் ஐக்கிய விடுதலை முன்ணனியில்(யுஎல்எப்ஏ) இருந்து பிரிந்த தனியாகச் செயல்படும் அமைப்பாகும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மக்களவையிலும், மாநிலங்களவையும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்டத்துக்கு எதிராக கடந்த 2 நாட்களாக அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் கடுமையாக போராடி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.
போலீஸாருக்கும், மக்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல் வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அசாம், திபுரா மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இன்டர்நெட் இணைப்பை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது
இந்நிலையில் உல்பா(இன்டிபென்டன்ட்) அமைப்பின் தலைவர் பரேஷ் பருவா தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாணவர்கள், கிரிஷ்ஹாக் முக்தி சங்ராம் சமிதி, அமைப்பினர், பல்வேறு குழுக்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகச் சாலையில் இறங்கி அமைதியாகப் போராடி வருகிறார்கள்.ஆனால், அதிகாரிகள் போலீஸாரின் தாக்குதலால், அடக்குமுறையால் அடக்க முயல்கிறார்கள். இது தொடர்ந்தால் நாங்கள் பொறுமையாக இருக்கமாட்டோம், தகுந்த பதிலடியை அசாம் அரசுக்கு அளிப்போம்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மக்கள் தாமாக முன்வந்து போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் வாபஸ் பெறும்வரை தொடர வேண்டும். வன்முறையைத் தூண்டிவிட்டு மோசமான எண்ணங்கள் கொண்டவர்கள் இயக்கத்தைப் பலவீனமாக்க முயல்கிறார்கள்" எனத் தெரிவித்தார்
பேச்சுவார்த்தைக்கு ஆதரவான உல்பா தலைவர் அரவிந்தா ராஜ்கோவா நிருபர்களிடம் கூறுகையில், " குடியுரிமைச் சட்டம் மூலம் அச்சுறுத்தல் வரும் போது, அசாம் மக்கள் தங்கள் சொந்த மண்ணையும், சொத்தையும் பாதுகாப்பது அவர்களின் உரிமை. இந்தச் சட்டம் அசாமை அழித்துவிடும், இந்த சட்டத்தை எந்தவிலை கொடுத்தேனும் நடைமுறைப்படுத்தவிட மாட்டோம்.
அநியாயங்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக அசாம் மக்கள் நீண்டகாலமாகப் போராடி வந்துள்ளார்கள். கடந்த 1979-ம் ஆண்டில் இருந்து அசாம் மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடி வருகிறார்கள். எங்கள் தாய்மண்ணை அழிக்கும் அச்சுறுத்தலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்" எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT