Published : 13 Dec 2019 03:18 PM
Last Updated : 13 Dec 2019 03:18 PM
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் 'ரேப் இன் இந்தியா' என்ற பேச்சால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார்.
அதேபோன்று மாநிலங்களவையையும் தேதி குறிப்பிடாமல் அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதையடுத்து 20 அமர்வுகளாக நடந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தது.
குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் மாதம் 18-ம் தேதி தொடங்கி 20 அமர்வுகளாக நடத்தத் திட்டமிடப்பட்டது. கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று அவை கூடியதும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் மேக்வால், ராகுல் காந்தி ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சை எழுப்பினார்.
மேக்வால் பேசுகையில், "பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தைக் கிண்டல் செய்து 'ரேப் இன் இந்தியா' என்று பேசியுள்ளார். அப்படி என்றால், பலாத்காரம் செய்ய மக்களை அழைக்கிறார், வரவேற்கிறார். என்ன அர்த்தத்தில் பேசியுள்ளார். ராகுல் காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும்" என்றார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுந்து பேசுகையில், ராகுல் காந்திக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து, மன்னிப்பு கேட்கவும், சோனியா காந்தி ராகுலுக்கு அறிவுரை கூறவும் தெரிவித்தார். மேலும், பாஜக பெண் எம்.பி.க்கள் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
அப்போது அவைத்தலைவர் ஓம் பிர்லா பேசுகையில், "குளிர்காலக் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்த கூட்டத் தொடரில் 18 மசோதாக்கள் விவாதத்துக்கு எடுக்கப்பட்டன. அதில் 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக குடியுரிமை திருத்த மசோதா, சிட்பண்ட் மசோதா, ஆயுதங்கள் திருத்த மசோதா, தாதர் மற்றும் நாகர் ஹாவேலி, டையு டாமனை யூனியன் பிரதேசங்களுடன் இணைத்தல் மசோதா, இ-சிகரெட்டுக்கு தடைச் சட்டம் உள்ளிட்ட 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத் தொடரில் மொத்தம் 20 அமர்வுகள் நடந்தன. 130 மணிநேரம் 45 நிமிடங்கள் கூட்டத்தொடரில் 121 மணிநேரம் அவை நடந்தது. 243 கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும், காற்று மாசு மற்றும் காலநிலை மாற்றம், பயிர் விளைச்சல் இழப்பு மற்றும் விவசாயிகள் பாதிப்பு குறித்து இரு சிறிய அமர்வுகள் கூட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அவையை ஒத்திவைக்கும் முன்பாக அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், "மாநிலங்களவையில் 250-வது அமர்வு இன்றுடன் முடிகிறது. குளிர்காலக் கூட்டத்தை மிகவும் ஆக்கபூர்வமாக நடத்த உதவிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
ஆரோக்கியமான விவாதங்கள் இந்த அவையில் நடந்தன. இந்த முறை நடந்த குளிர்காலக் கூட்டத்தொடர் முழுமையாக எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிய மனவருத்தம் இருக்கிறது, அதை உறுப்பினர்கள் தவிர்த்திருக்கலாம்.
கடந்த முறையும் 104 சதவீதம் அவை சிறப்பாகச் செயல்பட்டது. இந்த முறையும் 100 சதவீதம் அவையில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்தன. 108 மணிநேரம் 33 மணிநேரத்தில் 20 அமர்வுகள் நடந்தன. இதில் 107 மணிநேரம் 11 நிமிடங்கள் அவை சிறப்பாக நடந்தது. 11 மணிநேரம் 47 நிமிடங்கள் அவையில் அமளி ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT