Published : 20 Aug 2015 12:14 PM
Last Updated : 20 Aug 2015 12:14 PM
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஸ் அஜீஸுடன், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்வதை தடுக்கும் வகையில், அவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் அடுத்த வாரம் இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையில் பேச்சு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஸ் அஜீஸுடன் ஆலோசனை நடத்த காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதரகம் அழைப்பு விடுத்தது.
ஹுரியத் மாநாட்டு அமைப்பின் இரு கோஷ்டி பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பிரிவினைவாத தலைவர்களை பாகிஸ்தான் தூதரகம் சந்திப்புக்கு அழைத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை), மிதவாத பிரிவினைவாத தலைவர் மிர்வாயிஸ் உமர் ஃபரூக், சையது அலி ஷா கிலானி ஆகியோர் காஷ்மீர் போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர். அதேபோல், யாசின் மாலிக்கும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்துப்பேசினால் அதற்கு உரிய பதிலளிக்கும் வகையில் இந்தியா செயல்படும். பாகிஸ்தானில் உள்ள சில பிரிவினர் இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சு நடத்துவதை விரும்பாமல் அதனை சீர்குலைக்க விரும்புகின்றனர்.
இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தை இந்தியா திரும்பப் பெறச்செய்யும் நிர்பந்த நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது ஆத்திரப்படுத்தும் செயல் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT