Published : 13 Dec 2019 01:07 PM
Last Updated : 13 Dec 2019 01:07 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவையில் 7 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பி.க்கள் வாக்களித்து நிறைவேற்றினர். எதிராக 105 வாக்குகள் பதிவாகி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு நேற்று இரவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து குடியுரிமை திருத்தச் சட்டமானது.
இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேயிடம் மொய்த்ரா வழக்கறிஞர் கோரினார். இந்த மனுவை இன்று அல்லது 16-ம் தேதி விசாரிணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது " இந்த மசோதா அனைவரும் சமத்துவ உரிமை என்ற அடிப்படை உரிமைகளை மீறி மதத்தின் அடிப்படையில் ஒரு சிலபிரிவினருக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படுகிறது.
மேலும் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்ஸிகள் ஆகியோருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டு, முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மதத்தின் அடிப்படையில் பிரிவினை காட்டப்பட்டு குடியுரிமை வழங்கப்படுகிறது.
புலம்பெயர்ந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதில் எந்தவிதமான குறைகளும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. ஆனால், அவர்கள் மதத்தின் பெயரால் வேறுபாடு காட்டப்படுவதைத்தான் எதிர்க்கிறோம்.
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 3 நாடுகளி்ல் இருக்கும் முஸ்லிம் சிறுபான்மையின மக்களான அகமதியாஸ், ஷியா, ஹசாராஸ் ஆகியோர் புறக்கணிக்கப்படுகின்றனர். இதற்குச் சட்டத்தில் எந்தவிதமான விளக்கமும் இல்லை. அதேபோல, இலங்கை, மியான்மர், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் மதச்சிறுபான்மையினருக்கும் ஏன் குடியுரிமை வழங்கும் வசதிகள் இல்லை.
திருத்தப்பட்ட இந்த சட்டம் அப்பட்டமாக அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. ஆனால், மனிதநேயத்துக்கும், தேசத்துக்கும் விரோதமானது" இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT