Last Updated : 13 Dec, 2019 12:19 PM

 

Published : 13 Dec 2019 12:19 PM
Last Updated : 13 Dec 2019 12:19 PM

ராகுல் காந்தியின் 'ரேப் இன் இந்தியா' கருத்துக்கு பாஜக பெண் எம்.பி.க்கள் கடும் கண்டனம்: ஸ்மிருதி இரானி சரமாரி கேள்வி

புதுடெல்லி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று மத்தியப் பிரதேசத்தில் பொதுக்கூட்டத்தில் 'ரேப் இன் இந்தியா' என்று பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கக் கோரி மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆவேசமாகப் பேசினார்.

முன்னதாக, நேற்று (வியாழக்கிழமை) ராகுல் காந்தி மத்தியப் பிரதேசத்தின் கோட்டா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, நரேந்திர மோடி மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் இங்கே தினமும் ரேப் இன் இந்தியா (இந்தியாவில் பலாத்காரங்கள்) நடைபெற்று வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவால் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அப்பெண் மோசமான விபத்தில் சிக்கினார். ஆனால், அதைப் பற்றி நரேந்திர் மோடி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

— ANI (@ANI) December 13, 2019

பெண்களைப் படிக்கவைப்போம்; பாதுகாப்போம் என்று மோடி அறைகூவல் விடுத்தார். ஆனால் யாரிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறவில்லை. பாஜகவினரிடமிருந்து தான் பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை" என்று பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு இன்று மக்களவையில் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. ராகுல் காந்தி பிரதமரையும், பிரதமரின் திட்டங்களையும் மட்டுமல்லாமல் பெண்களையும் அவமதித்துவிட்டார். அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார். அவருக்கு ஆதரவாக பாஜக பெண் எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பினர்.

அவையில் பேசிய ஸ்மிருதி இரானி, ''ராகுல் காந்தியின் 'ரேப் இன் இந்தியா' விமர்சனம் தரக்குறைவானது. இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக ஓர் அரசியல் தலைவர் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கிறார். இதுதான் ராகுல் நாட்டு மக்களுக்குச் சொல்ல விரும்பும் கருத்தா? ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் உள்ள எல்லா ஆண்களுமே பலாத்காரர்கள் அல்ல. இது ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமதிக்கும் பேச்சு. ராகுல் காந்திக்கு 50 வயதாகியும்கூட இத்தகைய கருத்து பலாத்காரங்களை ஊக்குவிக்கும் என்பதை உணர முடியவில்லையே. ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனப் பேசினார்.

அப்போது குறுக்கிட்டு ராகுல் காந்திக்கு ஆதரவாகப் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், ராகுல் காந்தி நாட்டில் அன்றாடம் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளையே 'ரேப் இன் இந்தியா' என்று சுட்டிக் கட்டினார்" என்று விளக்கம் அளித்தார்.

சபாநாயகர் அமைதி காக்க வலியுறுத்தியும், ஸ்மிருதி இரானியோ பாஜக பெண் எம்.பி.க்களோ சமாதானம் அடைவதாக இல்லை. எதிர்க்கட்சியினரும் கோஷம் எழுப்பி வந்தனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து மக்களவையை அரை மணிநேரம் ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

மாநிலங்களவையிலும் இப்பிரச்சினை எதிரொலித்தது. மாநிலங்களை உறுப்பினர் பிரகலாத் ஜோஷி பேசும்போது, ''ராகுல் காந்தி ரேப் இன் இந்தியா எனக் கூறுகிறார். அப்படியென்றால் அவர் வெளிநாட்டவர் இந்தியா வந்து இந்தியப் பெண்களை பலாத்காரம் செய்யுமாறு அழைக்கிறாரா?'' என்று கேட்டார்.

ஆனாலும், அவையில் கூச்சலும் குழப்பமும் நீடித்தது. மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் அரை மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x