Published : 12 Dec 2019 08:54 PM
Last Updated : 12 Dec 2019 08:54 PM
மகாராஷ்டிராவில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணியான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசில் அமைச்சர்களுக்கு 2 வாரங்களுக்குப் பின் இன்று பொறுப்புகள் வழங்கப்பட்டன.
இதில் சிவசேனா கட்சிக்கு முக்கியப் பொறுப்பான உள்துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது. என்சிபி கட்சிக்கு நிதித்துறையும், காங்கிரஸ் கட்சிக்கு வருவாய்த் துறையும் தரப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜக, சிவசேனா இடையிலான கூட்டணி முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக எழுந்த மோதலில் பிரிந்தது. இதனால் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. ஆனால், சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கூட்டணியாக ஆட்சி அமைக்க முயன்றன. ஆனால், அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சி அமைத்த பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி 80 மணிநேரத்தில் கவிழ்ந்தது.
இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி தலைமையில் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி அமைந்து, முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார்.
உத்தவ் தாக்கரே கடந்த மாதம் 28-ம் தேதி ம்காராஷ்டிர முதல்வராகப் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்கும்போது என்சிபி, காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் சார்பில் 6 பேர் இலாகா இல்லாத அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். இரு வாரங்களாகியும் எந்த அமைச்சருக்கும் இலாகா இல்லாமல் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று முக்கியத் துறைகள் யாருக்கு என்று பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு உள்துறை, நகர மேம்பாடு, வனத்துறை, சுற்றுச்சூழல் நீர்வளங்கள், நீர் சேமிப்பு, சுற்றுலா, பொதுப்பணி, சட்டப்பேரவை விவகாரத்துறை ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
சிவேசேனாவைச் சேர்ந்த சுபாஷ் தேசாய்க்கு தொழில்துறை, உயர் மற்றும் தொழிற்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலன், தோட்டக்கலை, போக்குவரத்து, மராத்தி மொழி, கலாச்சாரம், துறைமுகம் ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
என்சிபி அமைச்சர் ஜெயந்த் பாட்டீலுக்கு நிதித்துறை, திட்டமிடல், வீட்டு வசதி, பொது சுகாதாரம், கூட்டுறவு, உணவு சிவில் சப்ளை, தொழிலாளர் துறை, சிறுபான்மை நலன் ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
சாஹல் பூஜ்பாலுக்கு நீர்ப் பாசனம், கிராம மேம்பாடு, சமூக நீதி, கலால் வரி, திறன் மேம்பாடு, உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் அமைச்சர் பால சாஹேப் தோரட்டுக்கு வருவாய்த் துறை, எரிசக்தி, மருத்துவக் கல்வி, பள்ளிக் கல்வி, கால்நடைத் துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு அமைச்சர் நிதின் ராவத்துக்கு பொதுப்பணித்துறை, பழங்குடி நலன், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன், ஜவுளித்துறை, மறுமலர்ச்சி மற்றும் புனர் வாழ்வு, பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 21-ம் தேதிக்குப் பின் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT