Published : 12 Dec 2019 01:39 PM
Last Updated : 12 Dec 2019 01:39 PM
பிஹார் மாநிலம், முசாபர்பூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த காப்பகத்தில் தங்கி இருந்த ஏராளமான சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட வழக்கில் 2020-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிஹார் மாநிலம், முசாபர்பூரில் பிஹார் மக்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பிரிஜேஷ் தாக்கூர் சிறுமிகளுக்கான காப்பகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தக் காப்பகம் குறித்து ஆய்வு நடத்திய டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் இந்தக் காப்பகத்தில் ஏராளமான சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, தாக்கப்பட்டுள்ளார்கள் என்று கடந்த 2018-ம் ஆண்டு, மே 26-ம் தேதி பிஹார் அரசுக்கு அறிக்கை அனுப்பியது.
இதைத் தொடர்ந்து பிஹார் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு காப்பகத்தில் உள்ள சிறுமிகளை அரசு காப்பகத்துக்கு மாற்றியது. முதல் கட்டமாக பிஹார் மக்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பிரிஜேஷ் தாக்கூர், காப்பக ஊழியர்கள் என 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்
ஆனால், பிஹார் போலீஸார் விசாரிப்பதில் மனநிறைவு இல்லை எனக் கூறி சிபிஐக்கு விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையை பிஹார் நீதிமன்றத்தில் இருந்து டெல்லியில் சாஹேத்தில் உள்ள போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதல் நீதிபதி சவுரவ் குல்ஸ்ரேஸ்தா தலைமையில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேர் மீதும் டெல்லி போக்ஸோ நீதிமன்றத்தில் பலாத்காரம், குற்றச் சதி, குழந்தைகளைக் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த பிப்ரவரி மாதம் 25-ம்தேதி வழக்கின் வாதங்கள் தொடங்கின. சிபிஐ தரப்பில் குறிப்பிடப்பட்ட வாதத்தில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு, சிபிஐ தரப்பில் வாதங்கள் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது
இந்நிலையில் இந்த வழக்கில் டிசம்பர் 12-ம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், வழக்கை விசாரணை செய்த நீதிபதி சவுரவ் குல்ஸ்ரேஸ்தா விடுமுறையில் சென்றதால், கூடுதல் நீதிபதி சுதேஷ் குமார் தீர்ப்பை 2020-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT