Published : 11 Dec 2019 08:45 PM
Last Updated : 11 Dec 2019 08:45 PM
குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கையில் இருந்துவரும் இந்துக்களையும், பூட்டானில் இருந்து வரும் கிறிஸ்தவர்களையும் ஏன் சேர்க்கவில்லை என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான குலாம்நபி ஆசாத் கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமல்லாமல் மதரீதியாகத் துன்புறுத்தல்களைச் சந்தித்த சிறுபான்மையினர் குறித்த எந்த புள்ளிவிவரங்களும் மத்திய அரசிடம் இல்லை என்றும் குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டினார்.
குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 7 மணிநேர விவாதத்துக்குப்பின் மசோதா நிறைவேறியது.
இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று குடியுரிமை திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்து பேசினார். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் பேசினர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான குலாம்நபி ஆசாத் பேசியதாவது:
குடியுரிமை திருத்த மசோதாவை ஒட்டுமொத்த தேசமும் ஏற்றுக் கொண்டதாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக அரசு கூறினால், ஏன் அசாம், திரிபுரா, அருணாசலப்பிரதேசம், மேகாலயா, நாகாலாந்தில் போராட்டம் நடக்கின்றது
மரியாதைக்குரிய அமைச்சரே, நீங்கள் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, முத்தலாக் மசோதா, என்ஆர்சி, அரசியலமைப்பு 370 பிரிவு, குடியுரிமை திருத்த மசோதா ஆகியவற்றையும் இதேபோன்று தான் அறிமுகம் செய்தீர்கள். ஒவ்வொரு 4 முதல் 6 மாதத்துக்கு ஒருமுறையும் இதுபோன்ற மசோதாக்களைக் கொண்டு வந்து மக்களின் கவனத்தை வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை, ஏழ்மை, வறுமை ஆகியவற்றில் இருந்து திசை திருப்புகிறீர்கள்.
ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்களும் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள், ஏராளமான முஸ்லிம் பெண்கள் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கிலான முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டார்கள்.
ஆனால், அமைச்சர் கூறுவதைப் போல், அரசிடம் சிறுபான்மையினர் இந்த 3 நாடுகளிலும் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதற்கு எந்தவிதமான புள்ளி விவரங்களும்இல்லை. மக்களை முட்டாளாக்குகிறார்" எனத் தெரிவித்தார்
குலாம்நபி ஆசாத்தின் பேச்சுக்கு பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி பதில் அளித்தார். அவர் பேசுகையில், " பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தவர்கள் ஆகியோர் மோசமாக நடத்தப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள்.
அகமதியர்கள், ஷியா முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் ஷியா பிரிவினரை அதிகம் கொண்டுள்ள ஈரான் நாட்டுக்குச் செல்லலாம், பஹ்ரைன் செல்லலாம். அகமதியர்களை முஸ்லிம்களாக அங்கீகரித்தும் அவர்கள் பட்டியலுக்குள் வர முடியாது. ஒரு பாகிஸ்தான் முஸ்லிம் கூட அங்கிருந்து நம்முடைய நாட்டுக்கு வர விருப்பமாக இருக்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. ஆதலால், அவர்களை இந்த பட்டியலில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இலங்கைத் தமிழர்கள் மதரீதியாகத் துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வரவில்லை. அங்கு நடந்த போரின் காரணமாகவே இங்கு வந்தார்கள் "எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT