Published : 11 Dec 2019 03:29 PM
Last Updated : 11 Dec 2019 03:29 PM
இஸ்ரோவின் ‘ரிசாட்-2பிஆர்1’ உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 10 செயற்கைக் கோள்ளை தாங்கிச் செல்லும் பிஎஸ்எல்வி - சி 48 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
விவசாயம், காடு வளர்ப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் வகையில் துல்லியமான வானிலை தரவுகளை பெறும் விதமாக ‘ரிசாட்-2பிஆர்1’ செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி48 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் இன்று (டிச.11) மாலை சரியாக 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகள் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிட்டனர்.
இந்த செயற்கைக் கோளுடன் சேர்ந்து ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக் கோள், அமெரிக்காவின் 6 செயற்கைக் கோள்கள் என மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் வர்த்தக ரீதியில் விண்ணில் ஏவப்பட்டன.
வானிலை தொடர்பான ரேடார் படங்களை வழங்கும் ‘ரிசாட்-2பிஆர்1’ புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் 628 கிலோ எடை கொண்டது. இது 576 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. செயற்கைக் கோள் அந்த இலக்கை அடைய 21 நிமிடங்கள், 19 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இது பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50-வது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT