Published : 10 Dec 2019 01:50 PM
Last Updated : 10 Dec 2019 01:50 PM
குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது இந்தியாவின் சகிப்பின்மையையும், குறுகிய மனப்பான்மையையும் காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்குக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரி்ல் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், " மக்களவையில் நேற்று நள்ளிரவில் குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், சகிப்பின்மை மற்றும் குறுகிய மனப்பான்மையை இந்தியா உறுதி செய்துள்ளது. நம்முடைய முன்னோர்கள் சுதந்திரத்துக்காக தங்களுடைய ரத்தத்தை, வாழ்க்கையைத் தியாகம் செய்தார்கள்.
சமத்துவ உரிமை, மதச்சுதந்திர உரிமை போன்றவற்றுக்காக மிகவும் கடினப்பட்டு சுதந்திரம் பெற்றோம். நம்முடைய அரசியலமைப்பு, நம்முடைய குடியுரிமை, வலிமையான ஒன்றுபட்ட இந்தியா அனைவருக்குமானது என்பதே நம்முடைய கனவுகள்.
நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தைத் திட்டமிட்டு அழிக்கும் இந்த அரசுக்கு எதிராக நாம் போராடுவோம். நம்முடைய நாடு நமக்கே உரித்தான அடிப்படைகளை விலக்கி நமது வலிமையால் உருவாக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT