Published : 09 Dec 2019 08:27 PM
Last Updated : 09 Dec 2019 08:27 PM
அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நில விவகார வழக்கில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட வழங்க வேண்டும் என அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அகில பாரத இந்து மகா சபா உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.
நவம்பர் 9-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஏற்கெனவே 5 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இப்போது 2 மனுக்கள் கூடுதலாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் முறையாக இந்து அமைப்பு சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம். அதேசமயம், முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், மாநில அரசும் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஏற்பதாக முதலில் கூறிய முஸ்லிம் அமைப்புகள் பின்னர் சீராய்வு மனுத் தாக்கல் செய்வதாக அறிவித்தன. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மவுலானா முப்தி ஹஸ்புல்லா, மவுலானா மக்புசூர் ரஹ்மான், மிஷ்பாஹுத்தீன், முகமது உமர் மற்றும் ஹாஜி நஹூப் ஆகியோர் தனித்தனியாக 5 சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆதரவு அளித்துள்ளது. அடுத்தது 6-வது நபராக முகமது அயூப் என்பவரும் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையே மூல மனுதாதரர் சித்திக் சார்பில் மவுலானா சயத் ஆசாத் ரஷித் என்பவரும் சீராய்வு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த சூழலில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்குவதை எதிர்த்து அகில பாரத இந்து மகா சபா சார்பில் இன்று சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர வரலாற்று அறிஞர் இர்பான் ஹபிப், பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்நாயக், சமூக ஆர்வலர்கள் ஹர்ஸ் மந்தர், நந்தினி சுந்தர், ஜான் தயால் உள்ளிட்ட 40 பேர் சேர்ந்து தனியாக ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
அகில பாரத இந்து மகா சபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ''உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள மசூதி இடிக்கப்பட்டது என்ற வார்த்தை தவறானது. மசூதி என்பது ஆதாரங்கள், ஆவணங்களுக்குப் புறம்பானது.
சர்ச்சைக்குரிய இடத்தில் இருப்பது மசூதிதான் என்பதை நிரூபிக்க முஸ்லிம்கள் தவறிவிட்டதால், அது கேள்விக்குள்ளாகி இருக்கிறது. அதேசமயம், இந்துக்கள் இந்த இடம் ராமர் பிறந்த இடம், வழிபாடு நடத்திய இடம் என்பதை நிரூபித்துள்ளார்கள். ஆதலால், சர்ச்சைக்குரிய இடத்தில் இருப்பது மசூதியாக இருப்பதற்கு ஆதாரங்கள் இல்லை.
சர்ச்சைக்குரிய இடத்தை உரிமை கொண்டாட முஸ்லிம்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. ஆதலால் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்கு அவர்களுக்கு வழங்கக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT