Published : 09 Dec 2019 06:05 PM
Last Updated : 09 Dec 2019 06:05 PM
நாட்டில் பாலியல் பலாத்காரக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அது குறித்துக் கண்டிக்காமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3-வது கட்டமாக, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹசாரிபார்க் மாவட்டம், பார்க்காகோ நகரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
உலகில் பாலியல் பலாத்காரங்களின் தலைநகராக இந்தியா மாறி இருக்கிறது. நாளுக்கு நாள் நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பலாத்காரக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், பிரதமர் மோடி அதுகுறித்துக் கண்டிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், பெண் ஒருவரைப் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்கினார். அப்போதும் பிரதமர் மோடி மவுனம் காத்தார். பெண்கள் உயிரோடு எரிக்கப்படுகிறார்கள், சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஆனால், மோடி தொடர்ந்து மவுனமாகவே இருக்கிறார்.
பெண்களும், விவசாயிகளும் தோட்டாக்களால் குறிவைக்கப்படுகிறார்கள். பெண்கள் தங்கள் வீட்டை விட்டு அச்சமில்லாமல் வர முடியவில்லை.
விவசாயிகளைப் பாதுகாப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்படுகின்றன. விவசாயிகள் போராட்டம் நடத்தினால் கொல்லப்படுகிறார்கள்.
விவசாயிகள் நிலத்தைப் பாதுகாக்க நாங்கள்தான் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் கொண்டு வந்தோம். இந்தச் சட்டத்தின்படி, பஞ்சாயத்து அனுமதியில்லாமல் விவசாயிகளிடமிருந்து நிலத்தை எடுக்க முடியாது. இந்தச் சட்டத்துக்கும் பிரதமர் மோடி எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஜார்க்கண்ட் முதல்வரிடம் கேட்டுக்கொண்டார்.
ஊழலுக்கு எதிராகப் போராடுகிறேன் என்று பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், ஜார்க்கண்ட் முதல்வர்தான் அதிகமான ஊழல் அரசியல்வாதியாக இருக்கிறார்.
உங்களின் பணம் அதானிக்கும், அம்பானிக்கும் அளிப்பதால்தான் பிரதமர் மோடியின் உருவம் தொலைக்காட்சியில் தெரிகிறது. விவசாயிகளையும், ஏழை மக்களையும் மோடி ஆரத் தழுவிப் பார்த்துள்ளீர்களா?
ஆனால், தொழிலதிபர்களை அவர் கட்டி அணைத்து வரவேற்பார். 15 தொழிலதிபர்களுக்காகவே இந்த அரசு நடத்தப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் அந்த 15 தொழிலதிபர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தது. உலகம் கற்பதற்கு இந்தியாவைப் பயன்படுத்தியது. ஆனால், பிரதமர் மோடி அரசில் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்துவிட்டது. நாட்டில் வெறுப்புணர்வு பரவியுள்ளது.
பணக்காரர்களுக்குக் கடன் தள்ளுபடி அளிக்கும் மோடி அரசு, ஏழைகளையும், விவசாயிகளையும் புறக்கணிக்கிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT