Last Updated : 09 Dec, 2019 04:51 PM

 

Published : 09 Dec 2019 04:51 PM
Last Updated : 09 Dec 2019 04:51 PM

ஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்புக்கான எந்த அச்சுறுத்தலும் இல்லை: மத்திய அமைச்சர் மேக்வால் விளக்கம்

மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் : கோப்புப்படம்

புதுடெல்லி

ஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்பு ஏற்படும் என்ற எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. அவ்வாறு கவலைப்படவும் வேண்டாம் என்று மத்திய கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் விளக்கம் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தில் மத்திய கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஆட்டோமொபைல் துறையில் தற்போது ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்துக்கு மாறும் பணிகள் நடந்து வருகின்றன.

அதாவது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பிஎஸ் 5 ரக இன்ஜின்களில் இருந்து பிஎஸ் 6 ரக இன்ஜின்களுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களை மாற்றி வருகின்றன. மேலும், பல நிறுவனங்கள் மின் வாகனங்களுக்கும் தங்களை மாற்றி வருகின்றன.

ஆதலால், வேலையிழப்பு ஏற்படும் என்ற எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை, கவலைப்படவும் வேண்டாம். இது ஒரு மறு சுழற்சிப் பணி. வேலையிழப்பு என்ற அச்சுறுத்தலும் வேண்டாம். நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசிவிட்டுதான் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு எழுத்துபூர்வமாக மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் மேக்வால் அளித்த பதிலில், " கடந்த 3 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையிலோ அல்லது அது சார்ந்த உற்பத்தி நிறுவனங்களோ மூடப்படவில்லை" எனத் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் பதில் அளிக்கையில், "வேலைவாய்ப்பு பதிவு அலுவலர்களை அந்தந்த மாநில அரசுகள்தான் பராமரித்து வருகின்றன. இதில் பெண்களுக்காக மட்டும், பெண்கள் மட்டும் பதிவு செய்யும் வகையில் 5 வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இருக்கின்றன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை கிடைத்த தகவலின்படி, வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களில் 2.72 கோடி ஆண்களும், 1.56 கோடி பெண்களும் பதிவு செய்துள்ளனர். இதில் 71.5 லட்சம் எஸ்.சி. பிரிவினரும், 25.5 லட்சம் எஸ்.டி. பிரிவினரும் 1.16 கோடி இதர பிரிவினரும் அடக்கம். இந்தத் தகவல் கடந்த 2016-ம் ஆண்டு அடிப்படையாகக் கொண்டது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x