Last Updated : 09 Dec, 2019 02:34 PM

 

Published : 09 Dec 2019 02:34 PM
Last Updated : 09 Dec 2019 02:34 PM

இந்த வார இறுதிக்குள் பத்து தூக்குக் கயிறுகள் தேவை:  பிஹார் சிறை அதிகாரிகளுக்கு ஆர்டர்

பாட்னா

பிஹாரில் உள்ள புக்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறை தூக்குக் கயிறுகளைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது என்று அறியப்பட்டதாகும். இந்த வார இறுதிக்குள் 10 தூக்குக் கயிறுகளை தயாரித்து வைத்துக் கொள்ளுமாறு அந்த சிறை அதிகாரிகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து நிர்பயா பலாத்கார வழக்குக் குற்றவாளிகள் வார இறுதியில் தூக்கில் போடப்படலாம் என்ற யூகங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் புக்சார் சிறை கண்காணிப்பாளர் விஜய் குமார் அரோரா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “சிறை இயக்குனரகத்திடமிருந்து எங்களுக்கு வந்த அறிவுறுத்தலின் படி டிசம்பர் 14ம் தேதிக்குள் 10 தூக்குக் கயிறுகள் தயாராக இருக்க வேண்டும். இது எங்கு பயன்படுத்தப்படும் என்று தெரியவில்லை. ஆனால் புக்சார் சிறை நீண்ட காலமாகவே தூக்குக் கயிறுகளை தயாரித்து வருகிறது.

ஒரு தூக்குக் கயிறு தயாரிக்க குறைந்தது 3 நாட்கள் தேவைப்படும். இது எந்திரத்தின் மூலம் தயாரிக்கப்படுவது அல்ல, மனித கைவினை மூலம்தான் தயாரிக்கப்பட்டு வருகிறது, கொஞ்சம் மோட்டார் எந்திரம் பயன்படும்.

அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டது எங்கள் சிறையில் தயாரிக்கப்பட்ட தூக்குக் கயிறில்தான். 2016-17-ல் பாட்டியாலா சிறையிலிருந்து எங்களுக்கு தூக்குக் கயிறுகள் கேட்டு ஆர்டர்கள் வந்தன. ஆனால் நோக்கம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை.

கடந்த முறை இங்கிருந்து தூக்குக் கயிறு, கயிறு ஒன்றின் விலை ரூ.1,725-க்கு அனுப்பப்பட்டது.

இரும்பு மற்றும் பித்தளையின் விலை மாறுபாட்டினால் தூக்குக் கயிறின் விலை காலத்திற்கேற்ப மாறும். தூக்குக் கயிறின் முடிச்சு உறுதியாக இருக்க இந்த உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு தூக்குக் கயிறைத் தயாரிக்க பொதுவாக 5 அல்லது 6 நபர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். சுமார் 152 கயிற்றிழைகள் ஒன்றாக சடைபோல் மிக வலுவாகப்பின்னப்பட்டு ஒரு தூக்குக் கயிறு உருவாகிறது ஒவ்வொரு தூக்குக் கயிறிலும் சுமார் 7,000 கயிற்றிழைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனாலும் இறுதிக்கெடு ஒரு பிரச்சினையில்லை. நிறைய திறமையான கைதிகலும் அனுபவசாலிகளும் இங்கு உள்ளனர். இந்தத் தூக்குக் கயிற்றினை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது நீண்ட காலம் வைத்திருந்தால் அது பயனுக்கு உதவாததாகி விடும்” என்று கூறினார்

டிசம்பர் 16, 2012-ல் நாட்டையே உலுக்கிய, தட்டி எழுப்பிய நிர்பயா பாலியல் பலாத்கார வழக்குக் குற்றவாளிகளை தூக்கிலிடவே புக்சார் சிறைக்கு தூக்குக் கயிறுகள் ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களின் ஒரு சில தரப்பினர் கூறிவருகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x