Last Updated : 08 Dec, 2019 04:30 PM

1  

Published : 08 Dec 2019 04:30 PM
Last Updated : 08 Dec 2019 04:30 PM

சென்னை ஐஐடி முதலிடம்: கடந்த 5 ஆண்டுகளில் 10 ஐஐடிகளில் 27 மாணவர்கள் தற்கொலை: ஆர்டிஐயில் அதிர்ச்சித் தகவல்

கோப்புப்படம்

இந்தூர்

நாட்டில் உள்ள 10 ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 27 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் உயர் கல்வித்துறை இந்த தகவலை வழங்கியுள்ளது. இதில் கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாகச் சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் 7 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

ஆர்டிஐ ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் கடந்த 2-ம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டுமுதல் 2019-ம் ஆண்டுவரை ஐஐடி கல்வி நிறுவனங்களில் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் என்று கேட்டிருந்தார்.

அதற்கு மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் அளித்த பதிலில், " நாட்டில் உள்ள 10ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 27 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். அதில் அதிகபட்சமாகச் சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் 7 மாணவர்களும், அடுத்ததாக, காரக்பூர் ஐஐடி கல்வி நிறுவனத்தில் 5 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர்.

டெல்லி ஐஐடி, ஹைதராபாத் ஐஐடியில் தலா 3 மாணவர்களும், மும்பை ஐஐடியில், குவஹாட்டி ஐஐடி, ரூர்கேலா ஐஐடி ஆகிய கல்வி நிறுவனங்களில் தலா இரு மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர்.

மேலும், வாரணாசி ஐஐடி, தான்பாத், கான்பூர் ஐஐடி ஆகியவற்றில் இருந்து தலா ஒரு மாணவர் தற்கொலை செய்துள்ளனர். ஆனால், இந்த மாணவர்கள் தற்கொலைக்கான காரணம் என்ன என்று கேட்டபோது அதற்கான விளக்கத்தை அளிக்கவில்லை.

நாடு முழுவதும் மொத்தம் 23 ஐஐடி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் இந்தூர், பாட்னா, ஜோத்பூர், புவனேஷ்வர், காந்திநகர், ரோபர், மாண்டி, திருப்பதி, பாலக்காடு, பிலாய், ஜம்மு, கோவா, தார்வாட் ஆகிய ஐஐடிகளில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவிதமான தற்கொலைச் சம்பவங்களும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அளிக்கப்பட்ட பதிலில், " ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் அளிக்கும் புகார்களை முறையாகப் பெற்று விசாரித்து நடவடிக்கை எடுக்கத் தனியாகக் குழு இருக்கிறது. அதில் மாணவர்கள் குறைதீர்ப்பு மையம், ஒழுங்கு நடவடிக்கை குழு, கவுன்சிலிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது

பாட்னாவில் ஏழைக் குடும்பத்து மாணவர்களைத் தேர்வு செய்து ஐஐடி நிறுவன நுழைவுத் தேர்வுக்கு சூப்பர் 30 என்ற நிறுவனம் பயிற்சி அளித்துவருகிறது. இந்த பயிற்சி மையத்தின் தலைவர் ஆனந்த் குமார் கூறுகையில், " தற்போதுள்ள சூழலில், ஐஐடிக்கு பயிலவரும் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறையை மாற்ற வேண்டும். புத்தாக்கத் திறமையுள்ள மாணவர்கள், பல்வேறு அழுத்தங்களைச் சமாளித்து வாழ்க்கையை எதிர்நீச்சல் போடக்கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

ஐஐடியில் உள்ள பேராசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, மாணவர்கள்மீது உரியக் கவனம் செலுத்துச் செய்ய வேண்டும்"எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x