Published : 08 Dec 2019 03:15 PM
Last Updated : 08 Dec 2019 03:15 PM
பாஜக ஜின்னாவின் பாதையில் பயணம் செய்கிறது. இது காந்தி, நேரு, ஆசாத், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் கனவுக்கு எதிராக இந்தியாவை மாற்றும் செயலாக அமைந்துவிடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் கடந்த செப்டம்பர் 1 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி 19 லட்சம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட உள்ளதாக வடகிழக்கு மாநிலங்களும் அறிவித்தன.
நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவி்தார், ‘‘பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் இந்துக்கள், பவுத்தர்கள், ஜெயின் மதத்தினர், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சி மக்கள் அனைவரையும் அகதிகளாக மத்திய அரசு ஏற்கும். அவர்களுக்குக் குடியுரிமையும் வழங்கப்படும்.
தேசிய குடியுரிமை பதிவேடு முறை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். யாரும் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அனைவரையும் தேசிய குடியுரிமையின் கீழ் கொண்டு வருவது சாதாரண செயல்முறைதான்’’ என அமித் ஷா கூறினார்.
மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘இந்த அரசு குடியுரிமை மசோதா தாக்கல் செய்தது முதல் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுளளது. இந்தியா முழுவதும் மதத்தின் அடிப்படையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நாகரீகத்துக்கே இடமில்லாமல் போய் விடும். பாகிஸ்தானின் இந்துத்துவா மாடல் போன்று இந்தியா மாறி விடும். மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தக்கூடாது என்பது தான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு.
சுதந்திரப் போராட்டத்தின்போது மதத்தின் பெயரால் நடந்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வர மகாத்மா காந்தி பெரும் முயற்சி செய்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் அவரது தியாகத்தை அர்த்தமில்லாமல் செய்து விடும். பாஜக ஜின்னாவின் பாதையில் பயணம் செய்கிறது. இது காந்தி, நேரு, ஆசாத், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் கனவுக்கு எதிராக இந்தியாவை மாற்றும் செயலாக அமைந்துவிடும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT