Published : 08 Dec 2019 02:12 PM
Last Updated : 08 Dec 2019 02:12 PM
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காகப் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் ஐயப்பன் கோயிலின் வருமானம் ரூ.69 கோடியை எட்டியுள்ளதாக தேவஸம்போர்டு தெரிவித்துள்ளது
கடந்த 2018-19-ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் வருமானம் ரூ.27.55 கோடியாக இருந்த நிலையில், 2019, டிசம்பர் 6-ம் தேதி நிலவரப்படி கோயிலின் வருமானம் ரூ.69.39 கோடியாக அதிகரித்துள்ளது என்று திருவிதாங்கூர் தேவஸம்போர்டு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காகக் கடந்த மாதம் 17-ம் தேதி திறக்கப்பட்டது. கோயில் நடைதிறக்கப்பட்டதில் இருந்து தென் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகிறது
கடந்த ஆண்டு சீசன் முழுமையிலும் கோயிலின் வருமானம் ரூ.41.84 கோடியாகத்தான் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் 20 நாட்களிலேயே ரூ.69 கோடியை எட்டியுள்ளது. சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்திருந்தது. இதனால், பல்வேறு சர்ச்சைகளும், குழப்பங்களும், போராட்டங்களும் சபரிமலையில் நடந்தன. இதனால் பக்தர்கள் வருகையில் பெரும் தடை ஏற்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு நடை திறப்புக்கு முன்பாக சீராய்வு மனுவில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைத்தது. மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் வரும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாது, அனுமதிக்கப்படவும் மாட்டார்கள் என்று கேரள அரசும் தெரிவித்ததால், பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது
இதுகுறித்து தேவஸம்போர்டு உறுப்பினர் விஜயகுமார் கூறுகையில், " கடந்த ஆண்டு மண்டல பூஜை சீசன் முழுவதும் கோயிலின் வருமானம் ரூ.41.84 கோடிதான் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு சீசன் தொடங்கி 20 நாட்களில் ரூ.69 கோடி வருமானம் தேவஸம்போர்டுக்கு கிடைத்துள்ளது. அரவணப் பிரசாதத்தின் மூலம் ரூ.28.26 கோடியும், அப்பம் பிரசாதம் மூலம் ரூ.4.2 கோடியும் கிடைத்துள்ளது. கோயில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.23.58 கோடி கிடைத்துள்ளது" எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT