Published : 07 Dec 2019 08:24 AM
Last Updated : 07 Dec 2019 08:24 AM

போலீஸாரின் துப்பாக்கி காட்சிப் பொருள் அல்ல: நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்

புதுடெல்லி

தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

தெலங்கானா கால்நடை பெண் டாக்டரின் கொடூர கொலை குறித்து கடந்த 2-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் ஆவேசமாக பேசினர். ஜெயா பச்சன் எம்.பி. பேசியபோது, "பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களை அடித்துக் கொலை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கட்சி பேதமின்றி எம்.பி.க்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

பெண் டாக்டரை கொலை செய்த 4 பேரையும் தெலங்கானா போலீஸார் நேற்று என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

பாஜக எம்.பி. மீனாட்சி லெகி மக்களவையில் பேசும்போது, "போலீஸாருக்கு வழங்கப்பட்டிருக்கும் துப்பாக்கி காட்சிப் பொருள் அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பியோடும்போதே போலீஸார் என்கவுன்ட்டர் நடத்தியுள்ளனர்" என்று தெரிவித்தார். அப்னா தளம் எம்.பி. அனுபிரியா படேல் கூறும்போது, "பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், உத்தர பிரதேசம் உன்னாவ் பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறார். உத்தர பிரதேசமோ, தெலங்கானாவோ நாட்டின் எந்த மூலையாக இருந்தாலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோரை தப்பிக்க விடக்கூடாது. நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும்போது, "பாலியல் வன்கொடுமை சம்பவங்களை காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன. மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலின்போது ஒரு குறிப்பிட்ட கட்சி பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியது" என்று குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் அவையில் கூறும்போது, "என்கவுன்ட்டர்களை நான் ஆதரிக்கவில்லை. நீதித் துறையின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். அப்போது என்கவுன்ட்டர்களுக்கு அவசியமே இருக்காது" என்று யோசனை கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x