Published : 07 Dec 2019 06:52 AM
Last Updated : 07 Dec 2019 06:52 AM

பாலியல் குற்றத்துக்காக மற்றவர்களும் இதுபோல் கொல்லப்படுவார்களா?- என்கவுன்ட்டரில் இறந்தவர்களின் குடும்பத்தினர் கேள்வி

டாக்டர் பிரியங்கா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் போலீஸ் என்கவுன்ட்டரில் நேற்று உயிரிழந்தனர். இந்த செய்தியை கேள்விப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சென்ன கேசவுலுவின் மனைவி கதறி அழுதார்.

ஹைதராபாத்

தெலங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட் டரில் கொல்லப்பட்டதை பொது மக்கள் வரவேற்றபோதிலும் அதை அவர்களின் குடும்பத்தினர் ஏற்க மறுக்கின்றனர். போலீஸ் நடவடிக்கை குறித்து பல்வேறு கேள்வி எழுப்புகின்றனர்.

கொல்லப்பட்ட நால்வரில் சென்னகேசவுலு என்பவர் மட்டுமே திருமணம் ஆனவர். அவரது மனைவி ரேணுகா (17) கர்ப்பிணி யாக உள்ளார். அவர் கூறும்போது, “விசாரணைக்கு பிறகு திரும்ப கொண்டுவந்து விடுவதாக கூறி என் கணவரை போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால் இரக்கமின்றி கொன்றுவிட்டனர். என்னையும் போலீஸார் அதே இடத்தில் கொல்லட்டும். அவர் இல்லாமல் நான் வாழ முடியாது. அவரை திருமணம் செய்து ஓராண்டு கூட முடியவில்லை. என்னிடமிருந்து அவரை பறித்துவிட்டனர். எனது கணவர் உண்மையில் தவறு செய்திருந்தால் அதை நீதிமன்றம் சொல்லட்டும். அவரை தூக்கில் போடட்டும். அந்த மருத்துவரை போல நானும் ஒரு பெண் தானே?” என்றார்.

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நவீனின் தந்தை எல்லப்பா கூறும் போது, “எனது மகனை வேண்டு மென்றே கொலை செய்துள்ளனர். அவனை சந்திக்கவும் அவனிடம் பேசவும் போலீஸார் எங்களை அனு மதிக்கவில்லை. எனது மகனும் மற்றவர்களும் குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கு போலீஸாருக்கு நிறைய கால அவகாசம் உள்ளது. சட்டப்பூர்வ நடவடிக்கை முடியும் முன்னரே அவர்களை ஏன் போலீஸார் கொன்றனர்?” என்றார்.

கொல்லப்பட்ட ஜொல்லு சிவாவின் தந்தை ராஜப்பா கூறும்போது, “எனது மகன் செய்த குற்றத்துக்காக அவனை போலீஸார் கொல்ல முடியும் என்றால் பிற பாலியல் குற்ற வாளிகளையும் இதேபோல் கொல்வார்களா?” என்றார்.

முக்கிய குற்றவாளி முகமது ஆரிஃப் கொல்லப்பட்ட செய்தி கேட்டதும் அவரது தாயார் மயங்கி விழுந்தார். செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x