Published : 04 Dec 2019 10:29 AM
Last Updated : 04 Dec 2019 10:29 AM

விக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி முன்பே கண்டுபிடித்து விட்டோம்: இஸ்ரோ அறிவிப்பு

புதுடெல்லி

விக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி சந்திரயான்-2ன் ஆர்பிட்டர் மூலம் முன்னதாகவே கண்டுபிடித்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆராய, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை 22-ம்தேதி விண்ணில் செலுத்தியது. கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதிதிட்டமிட்டபடி லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்தது.

ஆனால் கடைசிநிமிடத்தில் பாதை மாறி வேகமாகசென்று நிலவில் விழுந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேகமாகச் சென்று நிலவின் தரையில் லேண்டர் மோதியதாகக் கூறப்படுகிறது.

விக்ரம் லேண்டரின் மோதிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. நாசாவின் ஆர்பிட்டர் கேமிரா, விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க முயற்சித்தற்கு முன்பும், நிலவில் மோதிய பின்பும் தரை பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களை படம் பிடித்துள்ளது.

விக்ரம் லேண்டர் மோதி உடைந்த பாகங்களை கண்டுபிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் உதவியுள்ளார். தொழில்நுட்பத்துறை பொறியாளராக சென்னையில் பணியாற்றி வரும் சண்முக சுப்பிரமணியன் விக்ரம் லேண்டர் தொடர்பாக நாசா வெளியிட்டு வரும் புகைப்படங்களை ஆய்வு செய்து கடந்த அக்டோபர் மாதம், இந்தப் பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்திருக்கலாம் என நாசா மற்றும் இஸ்ரோவுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் நாசாவின் நிலவை ஆய்வு செய்யும் குழு குறிப்பிட்ட அந்தப் பகுதியில் கூடுதல் ஆய்வு நடத்தி அதிகாரபூர்வமாக அறிவித்தது. அந்த புகைப்படத்தில் உள்ள பச்சை நிறப் புள்ளிகள் லேண்டரின் சிதைவுகளை குறிப்பதாகவும், நீல நிற புள்ளிகள் லேண்டரின் பாகங்கள் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தை குறிப்பதாகவும் நாசா கூறி உள்ளது. இதற்காக சண்முக சுப்பிரமணியனுக்கு நாசா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விக்ரம் லேண்டர் இருப்பிடம் பற்றி சந்திரயான்-2ன் ஆர்பிட்டர் மூலம் முன்னதாகவே கண்டுபிடித்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ தலைவர் சிவன் இதுதொடர்பாக கூறுகையில் ‘‘விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டபோதிலும், அதனுடன் எந்த தொடர்பும் இன்னும் ஏற்படவில்லை. விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் நாசா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த தகவல்கள் செப்டம்பர் 9-ம் தேதியே இஸ்ரோவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைவரும் உறுதி செய்து கொள்ளலாம்’’ என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x