Published : 03 Dec 2019 03:48 PM
Last Updated : 03 Dec 2019 03:48 PM
உண்ண உணவின்றி பசி பொறுக்க முடியாமல், குழந்தைகள் களிமண் சாப்பிட்டதைப் பார்த்த தாய், கண்ணீருடன் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார். அதிகாரிகள் வந்து குழந்தையை மீட்டனர்.
பெற்ற குழந்தைகளுக்கு உணவுகூட வழங்க முடியாத நிலையில் இருப்பதை நினைத்து கண்ணீருடன் எழுதிய கடிதம் கண்டு மாநிலக் குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவினர் வந்து 4 குழந்தைகளை மீட்டு, காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தில் இருந்து சில கி.மீ. தொலைவில்தான் இந்த அவலம் நடந்துள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு உட்பட ஸ்ரீவெங்கடேஸ்வரம் வார்டில் சிறிய குடிசை வீட்டில் குடியிருப்பவர் ஸ்ரீதேவி. இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். 7 வயதில் இரு குழந்தைகளும், 5 வயதில் இரு பெண் குழந்தைகளும், ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும், 3 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளனர்.
ஸ்ரீதேவியின் கணவர் தென்னை மரம் ஏறும் கூலித் தொழில் செய்து வருகிறார். மதுவுக்கு அடிமையான ஸ்ரீதேவியின் கணவர் வீட்டுக்கு நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். தனது தாயைத் துணைக்கு வைத்துக் கொண்டு ஸ்ரீதேவி வீட்டில் வசித்து வருகிறார்
குடிகாரக் கணவர் குடும்பத்தை நிர்வகிக்க பணம் அளிக்காததால், தனது குழந்தைகளுக்கு முறையாக 3 வேளை உணவை ஸ்ரீதேவியால் வழங்க முடியாத சூழல். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கடும் பட்டினியால் இருந்த தனது குழந்தைகள் பசி பொறுக்க முடியாமல் சாலையில் கிடந்த களி மண்ணை எடுத்துச் சாப்பிடுவதை ஸ்ரீதேவி பார்த்துள்ளார். குழந்தைகளை அழைத்து வந்து கேட்டபோது, சாப்பிட உணவு இல்லாததால் களிமண்ணைச் சாப்பிட்டோ்ம் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாநிலக் குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவுக்குக் கண்ணீருடன் ஸ்ரீதேவி கடிதம் எழுதினார். ''தன்னுடைய 4 குழந்தைகளுக்கும் உணவு கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். என் குழந்தைகள் பசியால் களிமண்ணைச் சாப்பிடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களை அழைத்துச் சென்று உணவு வழங்கும்படி கேட்கிறேன்" என அக்கடிதத்தில் குறிப்பிட்டார்.
ஸ்ரீதேவி தனது குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் குடிசை வீடு : படம்
இந்தக் கடிதத்தைப் பார்த்த குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவினர் நேற்று காலை ஸ்ரீவெங்கடேஸ்வரம் வார்டுக்கு வந்து ஸ்ரீதேவியையும், அவரின் குழந்தைகளையும் மீட்டனர்.
முதலில் குழந்தைகள் அனைவருக்கும் பசிக்கு உணவு வழங்கிய அதிகாரிகள், ஸ்ரீதேவியின் 4 குழந்தைகளை மட்டும் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். மற்ற இரு குழந்தைகளும் பச்சிளம் குழந்தைகளாக இருப்பதால், ஸ்ரீதேவியிடம் இருப்பது அவசியம் என்பதால் அவரிடம் விட்டுவிட்டனர்
இந்தச் சம்பவம் குறித்து திருவனந்தபுரம் மேயர் ஸ்ரீகுமார் சம்பவ இடத்துக்கு வந்து, ஸ்ரீதேவியின் வீட்டைப் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ஸ்ரீதேவிக்கும், அவரின் குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அரசு சார்பில் வீடு இல்லாதவர்களுக்காகக் கட்டப்பட்டு வரும் வீடுகளில் ஒரு வீடு ஸ்ரீதேவிக்கு ஒதுக்கப்படும்.
ஸ்ரீதேவியின் குடும்ப வருமானத்துக்காக மாநகராட்சியில் தற்காலிகமாக ஒரு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் வசித்து வரும் வீட்டில் இருந்து ரயில் நிலையத்துக்கு அருகே இருக்கும் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள வீட்டில் தங்கிக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில், " ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் வேதனையில் வாழ்ந்துள்ளார்கள். இது மாநிலத்துக்கே அவமானம்" எனத் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா நிருபர்களிடம் கூறுகையில், "குழந்தைகள் பசியைப் போக்கிக் கொள்ள உணவில்லாமல் களிமண்ணைத் தின்ற கொடுமை மாநிலத்துக்கே அவமானம். கேரள அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "ஸ்ரீதேவியின் நிலை குறித்து அறிந்தேன். அவரின் குழந்தைகள் அனைவருக்கும் அரசு சார்பில் கல்வி வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 4 குழந்தைகளும் அரசின் பாதுகாப்பில் உள்ளனர். அந்தக் குழந்தைகளின் உடல்நலம், கல்வியை அரசு கவனிக்கும்" எனத் தெரிவித்தார்.
கேரளாவை உலுக்கியுள்ள இந்த விஷயம் குறித்து அறிந்ததும், மனிதநேயமுள்ள ஏராளமானோர் அந்தக் குழந்தைகளுக்கும், ஸ்ரீதேவிக்கும் உதவ முன்வந்துள்ளனர். பல தன்னார்வ அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT