Published : 03 Dec 2019 03:03 PM
Last Updated : 03 Dec 2019 03:03 PM
2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இந்தத் திட்டம் சொந்த மாநிலத்தை விட்டு இடம் பெயர்ந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள், தினக்கூலிகள் ஆகியோருக்கு உதவும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்தார்.
ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் நாட்டில் உள்ள எந்த நியாய விலைக் கடையிலும் தங்களுக்கு உரிய உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொதவழங்கல் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் பேசுகையில், " 2020-ம் ஆண்டு, ஜூன் 1-ம் தேதி ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இந்தத் திட்டம் மூலம் வேலைக்காக இடம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், கடைநிலையில் பணியாற்றும் ஊழியர்கள், வேலைக்காக அடிக்கடி தங்கள் இடத்தை மாற்றும் ஊழியர்கள் அதிகமானோர் பயன் பெறுவார்கள்.
இந்தத் திட்டம் அமலுக்கு வந்த பின் நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் தங்களுக்கு உரிய உணவு பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். பயனாளிகளின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு கடையிலும் ஆதார் மூலம் அடையாள அட்டையும், பயோமெட்ரிக் முறையும் பயன்படுத்தப்படும். இதற்காக அனைத்துக் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும்.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்குத் தேவையான செயல்திட்டத்தை உருவாக்க இந்தியத் தர நிர்ணய நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். சர்வதேச தரத்துக்குத் தேவையான வழிகளையும் இந்திய தரநிர்ணய ஆணையம் ஆய்வு செய்யும்.
51 நாடுகளில் உள்ள பல்வேறு வகையான பொருட்களுக்கு 998 வகையான அங்கீகாரத்தை இந்திய தர ஆணையம் வழங்கியுள்ளது" என்று ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT