Published : 02 Dec 2019 07:08 PM
Last Updated : 02 Dec 2019 07:08 PM
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் இல்லத்துக்குள் 7 பேர் திடீரென காரில் நுழைந்து அவருடன் புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டது பாதுகாப்புக் குறைபாட்டால் வந்துள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பைக் கடந்த மாதம் மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதற்கு பதிலாக சிஆர்பிஎப் தலைமையிலான இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. ஆனால், அந்தப் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததால்தான் அத்துமீறி வீட்டுக்குள் சிலர் காரில் வந்துள்ளார்கள் என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது.
டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள இல்லத்தில் பிரியங்கா காந்தி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் 26-ம் தேதி திடீரென ஒரு கார் பிரியங்கா காந்தியின் இல்லத்துக்குள் தோட்டம் அமைந்திருக்கும் பகுதி வரை வந்தது.
அந்தக் காரில் இருந்து 3 பெண்கள், 3 ஆண்கள், ஒரு சிறிய குழந்தை என மொத்தம் 7 பேர் இறங்கினார்கள். அவர்கள் நேரடியாகப் பிரியங்கா காந்தி இருக்கும் பகுதிக்கு நடந்து சென்று, அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்படுவதாகத் தெரிவித்தார்கள்.
அவர்களிடம் அமைதியாகவும், புன்னகையுடனும் பேசிய பிரியங்கா காந்தி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன்பின் அங்கிருந்து அந்த 7 பேரும் திரும்பிச் சென்றுவிட்டார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியங்கா காந்திக்கு சிஆர்பிஎப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில் எவ்வாறு ஒரு காரில் அத்துமீறி சிலர் வீட்டுக்குள் நுழைய முடியும் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்புகிறது. இந்த விவகாரத்தில் மிகப்பெரிய பாதுகாப்புக் குறைபாடு இருப்பதாகவும், இதை விரிவாகப் பேசவும் காங்கிரஸ் தலைமை அலுவலகம் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரியங்கா காந்திக்கு பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டுள்ளது தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் குமார் ரெட்டியிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறுகையில், "பிரியங்கா காந்திக்கு பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டுள்ளது குறித்து எனக்குத் தெரியாது. நான் இப்போதுதான் மக்களவையில் இருந்து வெளியே வருகிறேன். போலீஸார் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டபின், என்னுடைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு முடிவு சொல்கிறேன்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT