Published : 02 Dec 2019 06:17 PM
Last Updated : 02 Dec 2019 06:17 PM
சாலையில் உள்ள குழிக்குள் விழுந்து பல்வேறு விபத்துகளில் சிக்கி 2018-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று சாலையில் நடந்து செல்வோர் விபத்துகளில் இறப்பது குறித்து எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
''கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் சாலையில் நடந்து சென்றோர் விபத்துகளில் சிக்கி 22 ஆயிரத்து 656 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டில் 20 ஆயிரத்து 457 பேரும், 2016-ம் ஆண்டில் 15 ஆயிரத்து 746 பேரும் உயிரிழந்துள்ளனர். 2015-ம் ஆண்டில் 15 ஆயிரத்து 894 பேரும் உயிரிழந்தனர்.
மத்திய அரசும், மாநில அரசுகளும் சாலையில் நடந்து செல்வோர் விழிப்புணர்வாக நடக்க வேண்டும், விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்த நிலையிலும் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் 2 ஆயிரத்து 618 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகமாக உயிரிழப்புகளைச் சந்தித்த மாநிலம் என்ற அடிப்படையில் தமிழகம் இருக்கிறது. 2017-ம் ஆண்டில் தமிழகத்தில் 3,507 பேரும், 2016-ம் ஆண்டில் 2,966 பேரும், 2015-ம் ஆண்டில் 2,618 பேரும் சாலையில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர்.
சாலையில் உள்ள குழிகளில் வாகனங்களை விட்டு விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதும் அதிகரித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் 4,869 விபத்துகள் ஏற்பட்டு அதில் 2015 பேர் உயிரிழந்தனர்.
மத்திய அரசு, மாநில அரசுகளின் தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் கடந்த 2017-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2018-ம் ஆண்டில் உயிரிழப்புகள் குறைந்தன. கடந்த 2017-ம் ஆண்டில் சாலையில் இருந்த குழிகள் மூலம் 9,423 விபத்துகளில் 3,597 பேர் உயிரிழந்தனர்.
2016-ம் ஆண்டில் 6,424 விபத்துகளும் அதில் 2,324 பேரும் உயிரிழந்தார்கள். 2015-ம் ஆண்டில் 10 ஆயிரத்து 876 விபத்துகளும் அதில் 3,416 பேரும் உயிரிழந்தனர். 2014-ம் ஆண்டில் 11 ஆயிரத்து 106 விபத்துகளும், அதில் 3,039 பேரும் உயிரிழந்தனர்.
கடந்த 2018-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் சாலையில் இருந்த குழியால் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகும். அங்கு ஆயிரத்து 43 பேரும், அதைத் தொடர்ந்து ஹரியாணாவில் 222 பேரும், மகாராஷ்டிராவில் 166 பேரும் உயிரிழந்தனர்
2017-ம் ஆண்டில் உ.பி.யில்தான் அதிகபட்சமாக 987 பேரும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 726 பேரும், ஹரியாணாவில் 522 பேரும் சாலையில் இருந்த குழியால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
2016-ம் ஆண்டிலும் உ.பியில் 714 பேரும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 329 பேரும் ஒடிசா மாநிலத்தில் 208 பேரும் உயிரிழந்துள்ளனர்''.
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT