Published : 02 Dec 2019 03:13 PM
Last Updated : 02 Dec 2019 03:13 PM
பிரதமர் மோடியும், அமித் ஷாவும் டெல்லிக்குள் ஊடுருவியவர்கள் என்று காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதனால் மக்களவையில் இரு கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
மக்களவை இன்று தொடங்கியதும் கேள்வி நேரத்தின்போது மத்திய உருக்குத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் துணைக் கேள்வியை, காங்கிரஸைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுப்பினார். அப்போது அவர் பேசுகையில், "ஆளும் கட்சியினர் தன்னை ஊடுருவியவர் என்று பலமுறை கூறி கிண்டல் செய்ய முயல்கிறார்கள், பேசுகிறார்கள். நான் கூறுகிறேன், ஆமாம் நான் ஊடுருவியவர்தான். நான் கறையான்தான். என்னைப் போல் மோடியும் குஜராத்தில் இருந்து டெல்லிக்குள் ஊடுருவியர்தான், அமித் ஷாவும் ஊடுருவியவர்தான்" எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து மத்திய உருக்குத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், "ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எப்படிப்பட்டவர் என்பதை விரைவில் நாங்கள் வெளிப்படுத்துவோம்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு அவையில் இருந்த பாஜக எம்.பி.க்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்கக் கோரினார்கள்.
அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுந்து பேசுகையில், "காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் ஜோஷி பேசுவதற்கு முன், அவர் கட்சியின் தலைவர் எங்கிருந்து வந்தவர் என்பதைச் சிந்திப்பாரா? அவரை ஊடுருவியவர் என்று கூறலாமா? சவுத்ரி பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும்" என வலியுறுத்தினார்.
அதற்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், "நான் பேசியதற்கு நான் விளக்கம் அளிக்கிறேன். ஆனால், பாஜக என்னுடைய விளக்கத்தால் மனநிறைவு அடையாவிட்டால் நான் மன்னிப்பு கோருகிறேன்.
நான் தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரானவன். என்னுடைய குடும்பம் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் வந்தது. எங்களிடம் அதிகமான ஆவணங்கள் இல்லை. இருப்பினும் எங்களைச் சிலர் ஊடுருவியவர்கள் என்று கூறினால், எங்களால் ஒன்றும் கூறமுடியாது" எனத் தெரிவித்தார்.
ஆனால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோராததால், அவையில் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டார்கள். இதனால் அவைத் தலைவர் ஓம் பிர்லா அவையைச் சிறிது நேரம் ஒத்திவைத்தார்
அதன்பின் அவை கூடியபின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசுகையில், " ஊடுருவியவர் என்று பிரதமர் மோடி, அமித் ஷாவைக் குறிப்பிட்டது மிகப்பெரிய அவமானம். மக்களவைத் தேர்தலில் மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்துத் தேர்வு செய்துள்ளார்கள். அந்தத் தோல்வியில் இருந்து காங்கிரஸ் கட்சியால் இன்னும் வர முடியவில்லை. பிரதமர் மோடியின் கீழ்தான் நாட்டின் நன்மதிப்பு உலக அளவில் உயர்ந்துள்ளது. அவரையும், அமித் ஷாவையும் அவமானப்படுத்தியதைப் பொறுத்துக்கொள்ள முடியாது" எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலும் எழுந்து "சவுத்ரி மன்னிப்பு கோர வேண்டும்" என வலியுறுத்தியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT