Last Updated : 02 Dec, 2019 11:33 AM

5  

Published : 02 Dec 2019 11:33 AM
Last Updated : 02 Dec 2019 11:33 AM

திட்டமிட்ட நாடகம்: பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றது பற்றி பாஜக எம்.பி. அதிர்ச்சி பேச்சு

பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமார் ஹெக்டே : கோப்புப்படம்

பெங்களூரு

தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானது ரூ.40 ஆயிரம் கோடி மத்திய நிதியை பாதுகாக்கத்தான். நன்கு திட்டமிட்டுதான் நடத்தப்பட்ட நாடகம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பியுமான அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜக, சிவசேனா இடையிலான கூட்டணி முதல்வர் பதவியை பிரித்துக் கொள்வது தொடர்பாக எழுந்த மோதலில் பிரிந்தது. இதனால் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. ஆனால், சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கூட்டணியாக ஆட்சி அமைக்க முயன்றன.

அப்போது யாரும் எதிர்பாராத சூழலில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணையுடன் பெரும்பான்மை இல்லாத சூழலிலும் தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 80 மணிநேரத்தில் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவி ஏற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.இந்நிலையில், கர்நாடகத்தில் உள்ள உத்தர கர்நாடகத்தில் உள்ள எல்லப்பூர் எனும் இடத்தில் பாஜக எம்.பியும் முன்னாள் மத்தியஅமைச்சருமான அனந்தகுமார் ஹெக்டே பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் தேவேந்திர பட்னாவிஸ் 2-வதுமுறையாக முதல்வராகப் பதவி ஏற்று 80 மணிநேரத்தில் பதவி விலகினார். இந்த நாடகம் எதற்காக நிகழ்த்தப்பட்டது தெரியுமா. எங்களுக்குப் பெரும்பான்மை அவையில் கிடையாது, நிரூபிக்க முடியாது எனத் தெரிந்த பின்பும் ஏன் பட்னாவிஸ் முதல்வரானார். இது அனைவரின் மனதிலும் எழும் பொதுவான கேள்விதான்

மகாரஷ்டிராவின் முதல்வர் பொறுப்பில் மத்திய நிதி ரூ.40 ஆயிரம் கோடி குவிந்து கிடக்கிறது. ஒருவேளை என்சிபி, காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், ரூ.40 ஆயிரம் கோடியை நிச்சயம் மாநிலத்தின் மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், பல்வேறு விஷயங்களுக்கும் சுயலாபத்துக்கும் பயன்படுத்துவார்கள்.

இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ள தகவல் அறிந்ததும், இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதனால்தான் பட்னாவிஸ் பதவி ஏற்கும் போது சில அட்ஜஸ்மென்ட் செய்யப்பட்டது.

அதன்பின் பதவி ஏற்று 15 மணிநேரத்துக்குப்பின், பட்னாவிஸ் முறைப்படி அந்த பணத்தைப் பாதுகாத்துவிட்டார். அந்த பணம் அனைத்தும் மீண்டும் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. அல்லது அந்த பணம் இருந்தால், அடுத்துவரும் முதல்வர் அந்த பணத்தை என்ன செய்வார் என உங்களுக்குத் தெரியும்.

இவ்வாறு அனந்த குமார் ஹெக்டே தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x