Last Updated : 01 Dec, 2019 04:18 PM

2  

Published : 01 Dec 2019 04:18 PM
Last Updated : 01 Dec 2019 04:18 PM

எதிர்த்தவர்கள் இப்போது என்னுடன்; என்கூட இருந்தவர் எதிராகி விட்டார்: உத்தவ் தாக்கரே

முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் பேசியகாட்சி : படம் ஏஎன்ஐ

மும்பை

என்னை எதிர்த்தவர்கள் எல்லாம் என்னுடன் இருக்கிறார்கள். என்னுடன் இருந்தவர் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறார் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே பேசினார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடந்தது. சபாநாயகருக்காக நடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் கிஷான் கதோர் வாபஸ் பெற்றதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏ நானா படேல் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன்பின் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பாஜகவைச் சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தேவேந்திர பட்னாவிஸுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின் சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எனது நண்பர். நான் அவரை எதிர்க்கட்சித் தலைவராகப் பார்க்கவில்லை. பொறுப்புள்ள தலைவராகவே பார்க்கிறேன். நான் பட்னாவிஸிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

நான் எப்போதும் பட்னாவிஸுக்கு நண்பராகவே இருப்பேன். இப்போதும் என் மனதில் இந்துத்துவா சிந்தாந்தம் இருக்கிறது. அதை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன். கடந்த 5 ஆண்டுகளாக நான் பட்னாவிஸ் அரசுக்கு உறுதுணையாக இருந்தேனே தவிர துரோகம் செய்யவில்லை. நீங்கள் என்னுடன் நட்பாக, நல்லவிதமாக இருந்திருந்தால், பாஜக-சிவசேனா பிளவு நிச்சயம் நடந்திருக்காது.

நான் உண்மையில் அதிர்ஷ்டக்கார முதல்வர். ஏனென்றால், என்னை எதிர்த்தவர்கள் இப்போது என்னுடன் இருக்கிறார்கள். என்னுடன் ஒருகாலத்தில் நட்பாக இருந்தவர்கள் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளார்கள். என்னுடைய அதிர்ஷ்டத்தாலும், மக்களின் ஆசியாலும் இங்கு முதல்வராக வந்திருக்கிறேன்.

தேர்தலின்போது சிலர் கூறியதைப் போல் நான் மீண்டும் முதல்வராக வருவேன் என்று ஒருபோதும் கூறவில்லை. ஆனால் நான் வந்துவிட்டேன்.

நள்ளிரவில் எந்தவிதமான விஷயத்தையும், செயலையும் செய்யமாட்டேன் என்று மகாராஷ்டிர மக்களுக்கு இந்த அவையில் நான் உறுதியளிக்கிறேன். மக்களின் நலனுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே இந்த அரசு செய்யும்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்குவது மட்டும் இந்த அரசின் நோக்கம் அல்ல. அவர்களின் கவலைகளையும் படிப்படியாகப் போக்க வேண்டும்''.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

உத்தவ் தாக்கரேவைத் தொடர்ந்து என்சிபி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் பேசுகையில், " தேவேந்திர பட்னாவிஸ் சட்டப்பேரவைக்குத் திரும்பி வருவேன் எனத் தெரிவித்தது உண்மைதான். ஆனால், எங்கு அமர்வேன் என்று அவர் கூறவில்லை. இப்போது பேரவைக்கு வந்துள்ள பட்னாவிஸ், இங்கு உயர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இடத்தைப் பிடித்துள்ளார். இதுவும் முதல்வர் பதவிக்குச் சமமான இடம்தானே" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x