Last Updated : 29 Nov, 2019 03:30 PM

1  

Published : 29 Nov 2019 03:30 PM
Last Updated : 29 Nov 2019 03:30 PM

எந்த நடவடிக்கையையும் சந்திக்க தயார்; ராகுல் காந்தி திட்டவட்டம்: உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர தயாராகும் பாஜக

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூரை தீவிரவாதி என்று பேசிய கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன் என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் சந்திக்கத் தயார் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவருவது குறித்து பாஜக ஆலோசித்து வருகிறது.

மக்களவையில் நேற்று முன்தினம் பேசிய பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர், காந்தியை கொலை செய்த நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்று பேசினார். இதுகுறித்து கருத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து பதிவிடுகையில், " தீவிரவாதி பிரக்யா, தீவிரவாதி கோட்சேவை தேசபக்தர் என்று அழைக்கிறார். நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் வருத்தமான நாள் "என்று தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவி்க்கப்பட்டு ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர முயன்றுவருகிறது

மக்களவையில் பாஜக எம்.பி. தாக்கூர், நிஷிகாந்த் துபே ஆகியோர், பிரக்யா தாக்கூரை பற்றி அவதூறாகப் பேசிய ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர். இல்லாவிட்டால் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர அனுமதிக்கக் கோரி அவைத்தலைவரிடம் கோரினர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் நிருபர்கள் இன்று பிரக்யா தாக்கூர் குறித்து பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில், " நான் ட்விட்டரில் பதிவிட்ட என்னுடைய கருத்தில் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய கருத்தில் நிலையாக இருக்கிறேன். என் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதை வரவேற்கவும் செய்கிறேன்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக பிரக்யா தாக்கூர் கருத்து குறித்து ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறுகையில், " பிரக்யா தாக்கூர் என்ன கூறினாரோ அதுதான் பாஜக, ஆர்எஸ்எஸ் மனதில் இருப்பவை. இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும். இதை மறைக்க முடியாது. பிரக்யா தாக்கூருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று குரல் கொடுத்து என்னுடைய நேரத்தை நான் வீணடிக்க முடியாது" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x