Published : 29 Nov 2019 01:39 PM
Last Updated : 29 Nov 2019 01:39 PM
ஹைதராபாத்தில் பணிமுடிந்து வீடு திரும்பியபோது பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் எனவும் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதன்கிழமை இரவு, விலங்குகள் நல மருத்துவரான பிரியங்காரெட்டி (27) வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் அவரது இருசக்கர வண்டி பஞ்சர் ஆகியுள்ளது. அதனை சரிசெய்ய முயன்று அவர் தவித்துக்கொண்டிருந்தபோது, அப்போது உதவுவதாக கூறி அழைத்துச் சென்றவர்களால் பிரியங்கா வஞ்சமாக ஏமாற்றப்பட்டு பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் அவர் எரித்துக்கொல்லப்பட்டார். இரவு 9.22க்கு தொலைபேசியில் அழைத்த பிரியங்காவை மீண்டும் பெற்றோர் அழைத்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதிலிருந்து அவர்களுக்கு பதற்றம் கவ்வத் தொடங்கியது. இதனால் அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடியில் பிரியங்கா தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த இடத்திலிருந்து 25 கிமீ தூரத்தில் பிரியங்கா உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் உடல் எரிந்து போய் மோசமான நிலையில் பெற்றோர் உதவியுடன் அடையாளம் காணப்பட்டது. பிரியங்கா எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் குடும்பத்தினர் பேரதிர்ச்சியடைந்துள்ளனர். குற்றவாளிகள் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பிரியங்காவின் அவரது தந்தை, ''யார் இதைச் செய்திருந்தாலும் தூக்கில் தொங்க விடப்பட வேண்டும்'' என்று கூறினார்.
இன்று காலையிலிருந்து ட்விட்டர் பக்கங்களில் கொந்தளிப்பை வெளிப்படுத்திவரும்நெட்டிசன்கள் #RIPPriyankaReddy #JusticeForPriyankaReddy ஹேஸ்டேக்குகளை ட்ரண்டாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டத்தைத் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளதாவது:
தெலங்கானாவில் ஒரு பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி எரித்துக்கொல்லப்பட்டுள்ளார். தெருக்களில் ஓநாய்கள் இருப்பதைப் போன்ற ஒரு உணர்வை இது ஏற்படுத்தியுள்ளது. இந்த ஓநாய்கள் ஒரு பெண்ணைத் துரத்த எப்போதும் காத்திருக்கிறார்கள். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.
இவ்வாறு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT